நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஒரு வருடமானாலும்கூட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டங்களை தற்போதைய அரசாங்கம், ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்க முடியாமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்திரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளத்தை வழங்க வேண்டிய தினத்தில் அரசாங்கத்தினால் அதனை வழங்க முடியாமல் போயுள்ளதாக அமைச்சர்களே கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு மட்டுமல்ல பொருளாதார நெருக்கடி காரணமாக தனியார் நிறுவனங்களுக்கும் தங்களது ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளத்தை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள் வட்டிக்கு பணம் பெற்று தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்கி வருகின்றன.
மறுபுறத்தில் வரி அதிகரிப்பு காரணமாக மக்களின் வருமானம் குறைந்துள்ளது. வருமான மார்க்கம் இல்லாமல் போயுள்ளது.
பணவீக்கம் காரணமாக செலவீனங்கள் அதிகரித்துள்ளன. எனவே கிடைக்கும் ஊதியத்தை வைத்து வாழ்க்கையை கொண்டுசெல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கிடைக்கும் சம்பளம் மூன்று வாரங்களிலேயே முடிவடைந்து விடுவதால் நான்காம் வாரத்துக்கான செலவீனங்களுக்காக வட்டிக்கு பணத்தை பெறும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இறுதியாக வட்டிக்கான பணத்தை செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமையே மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மாதாந்த சம்பளத்துக்கு பதிலாக வாராந்த சம்பளத்தை வழங்குவதற்கான யோசனையை நாம் அரசாங்கத்துக்கு முன்வைக்கின்றோம். இதன்போது பாரியளவான தொகையை ஒரு நாளில் செலுத்துவதற்காக சம்பளத்தை வழங்குபவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து ஓரளவு மீள முடியும்.