கிழக்கிலுள்ள சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழக வளாகத்தை நிர்மாணிக்க 25 ஏக்கர் காணியைப் பெற்றுக்கொள்ள போலி ஆவணங்களை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சமர்ப்பித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இந்த விடயம் நேற்று தெரிவிக்கப்பட்டது.
சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் இரண்டு அதிகாரிகள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தனர்.
இதன்படி ஹிஸ்புல்லா, அவர் நிறுவிய ஹிரா பவுண்டேஷன் என்ற அமைப்பு மூலம் நிலத்துக்கு விண்ணப்பித்ததாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் காணி தொடர்பான பணிப்பாளர் அசங்க உதயகுமார தெரிவித்தார்.
அத்தோடு ஹிரா அறக்கட்டளை சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு தவறான ஆவணத்தை ஹிஸ்புல்லா பயன்படுத்தியதாக சமூக சேவைகள் திணைக்கள அதிகாரி தம்மிக்க வசலபண்டார தெரிவித்தார்.
சவுதி அரேபியாவின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் உயர்கல்வி மையம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்குமாறு 2012 மார்ச் 15 அன்று ஹிஸ்புல்லா அப்போதைய அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வாவிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.