2025 ஆம் ஆண்டில், மக்கள் மாற்றங்களை உணரும் வகையில், வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும், இந்த ஆண்டுக்குரிய திட்டங்கள் அனைத்தும், ஒக்ரோபர் மாதத்திற்குள் முடிவுறுத்தப்பட வேண்டும் எனவும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில், 2025 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்று காலை இடம்பெற்றது.
நடப்பாண்டு மற்றும் கடந்த ஆண்டு வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்த ஆண்டு திட்டங்களுக்கான அனுமதிகளை முற்கூட்டியே பெற்று, விரைவாக அதனைச் செயற்படுத்தி முடிக்க வேண்டும் என குறிப்பிட்ட ஆளுநர், ஒக்ரோபர் மாதத்திற்குள் அவை நிறைவு செய்யப்படுவதை, ஒவ்வொருவரும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
சில திட்டங்கள் பெயரளவில் உள்வாங்கப்படுவதை தவிர்த்து, நடைமுறைப்படுத்தக் கூடிய, மக்களுக்கு பயனளிக்கக் கூடிய திட்டங்களை தயாரிக்குமாறும், ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.
மாகாண நிர்வாகத்தினால் பராமரிக்க முடியாத கட்டுமானங்கள், திட்டங்களை தயாரிப்பதை விடுத்து, அதை பொது மக்கள் – தனியார் கூட்டு இணைவு மூலம் செயற்படுத்தக் கூடியதாக மாற்றியமைக்குமாறும், ஆளுநர் அறிவுரை வழங்கினார்.
விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் வழங்குவது மாத்திரமல்லாது, அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்பையும், சந்தை விலையையும் கருத்திலெடுத்துச் செயற்பட வேண்டும் எனவும், ஆளுநர் குறிப்பிட்டார்.
அத்துடன், வடக்கு மாகாணத்தில், நகர அபிவிருத்தி அதிகார சபையால் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.