இந்தியாவின் பராதீப் துறைமுகத்தை நோக்கி குவைத்திலிருந்து சென்று கொண்டிருந்த 1,6079 தொன்கள் எடைகொண்ட எம்.ரி நியுடயமன்ட் மசகு எண்ணெய்த்தாங்கிக் கப்பலின் மாலுமிகளுக்கான அறையில் கடந்த செப்டெம்பர் 3-ந் திகதி தீப்பிடித்திருந்தது.
தென்கிழக்கிலங்;கையின் சங்கமான் கந்தமுனைக்கு 38 கடல்மைல் தூரத்தில் காற்றழுத்தம், கடல் கொந்தளிப்பின் தாக்கம் என்பவற்றினால் அக்கப்பலில் தீ பிடித்திருந்தது.
கப்பலில் தீப்பிடித்ததையடுத்து இந்திய-இலங்கை விமான, கடற்படைகள்; ஏறத்தாள ஒருவாரகாலம் அத்தீயை அணைக்க பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டதை நாமறிவோம்.
ஆனால் அப்பாரிய எண்ணெய்க்கப்பலில் மூண்ட நெருப்பு பெரிதாகப்பரவி கப்பல் வெடித்திருக்குமேயானால் கிழக்கிலங்கை கரையோரம் முழுவதுமே பாரிய ‘மசகு எண்ணெய் சுனாமி’ யின் தாக்கத்துக்கே உட்பட்டிருக்கும்.
2004 ம் ஆண்டு டிசம்பர் 26ந்திகதி இந்தோனேஷியாவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான புவி நடுக்கத்தையடுத்தே தென்கிழக்காசியா உட்பட இலங்கையின் கிழக்குக்கரையோரமாக முல்லைத்தீவு முதல், தென்கிழக்குப் பகுதிவரையும் பின்னர் தொடர்ச்சியாக தென்னிலங்கையின் கரையோரங்கள் முழுவதையும் பாரியளவில் சுனாமிப்பேரலைகள் தாக்கி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியிருந்தன.
அன்று 16 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது இயற்கையின் சீற்றம். ஆனால் மசகு எண்ணெய் கப்பல், தீயின் தாக்கத்தினால் வெடித்திருக்குமேயானால், 2,70,000 தொன்கள் மசகு எண்ணெய் கடல் நீரில் கலந்து இலங்கையின் கிழக்குக் கரையோரம் முழுவதையும் எண்ணெய் பதார்த்தத்தினால் சீரழித்திருக்கும்.
2,70,000 மசகு எண்ணெய் மாத்திரமல்ல. அக்கப்பலை இயக்குவதாற்காக இருந்த 1700 தொன்கள் டீசல் எண்ணெய் கூட கடலில் கலந்து பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதே கடற்படை நிபுணர்களின் கணிப்பீடாக இருந்தது.
இந்நிலையில் இலங்கை-இந்திய கடற்படையினர் தீயை அணைப்பதில் நடத்திய போராட்டம் கப்பலை மாத்திரமல்ல. இலங்கையின் கிழக்கு கரையோரத்தையே காப்பாற்றிவிட்டுள்ளது.
‘மசகு எண்ணெய் சுனாமி’ கிழக்கு கரையோரத்தை தாக்கியிருக்குமேயானால், தென் கிழக்குப்பகுதியின் குமண, யால வனாந்திரப் பிரதேசங்களின் விலங்கினங்கள், அரியவகை பறவை இனங்கள் கடல்கரையோரத்தின் உயிரினங்கள், கடற்பாசிகள் என்பனவை பாதிக்கப்பட்டடிருக்கும் என்பதே சுற்றாடல் நிபுணர்களின் கருத்ததாகும்.
மசகு எண்ணெயின் தாக்கத்தினால் கிழக்குக் கரையோரத்திலுள்ள ஆயிரக்கணக்கான மீனவக்குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கும்.
இரண்டு லட்சம் தொன்களுக்கும் மேற்பட்ட மசகு எண்ணெய் அக்கப்பலில் இருந்தமையால் வடகிழக்கின் பெரும்பகுதி கூட எண்ணெய்ப்படிவங்களால் சூழப்பட்டிருக்கும்.
மாலைதீவுகள் வரை எண்ணெய்க்கசிவுகள் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் பலமாகவே இருந்தன.
கடல்வாழ் உயிரினங்கள்கூட பாரியளவில் பாதிக்கப்பட்டு, எண்ணெய்க்கசிவின் தாக்கத்தை அகற்ற பல மாதங்கள் பிடித்திருக்கும். சர்வதேச உதவியையும் நாடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும்.
கோடிக்கணக்கான பணவிரயமும் சுத்திகரிப்புப்பணிகளுக்காக செலவிடப்படவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும.;
அனர்த்தத்துக்குள்ளான எம்.ரி. நியுடயமன்ட் மசகுஎண்ணெய் கப்பல் ஐப்பானில் கட்டப்பட்டு 2000ம் ஆண்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
கிரேக்க கப்பல் கம்பனி ஒன்றுக்குச் சொந்தமானது. பனாமா நாட்டின் கொடியை சுமந்துள்ளது.
கப்பலின் நீளம் 1082 அடிகளாகும். அகலம் 200 அடிகளாகும். எடை 160,079 தொன்களாகும்.
கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க 4,40,000 லீட்டர் நீர் கப்பலின் மேற்தளத்தில் பாய்ச்சப்பட்டது. 9,900 தொன்கள் இரசாயன துகள்கள் வீசப்பட்டன.
23 மாலுமிகள் கப்பலில் இருந்தனர். இவர்களில் 15 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள். 7 பேர் கிரேக்க நாட்டவர்கள். ஒரு பிலிப்பைன்; நாட்டு மாலுமி வெடிப்பு ஏற்பட்ட மறுகணமே கொல்லப்பட்டார். 22 பேர் இலங்கை கடற்;படையினரால் காப்பாற்றப்பட்டனர்.
தீப்பிடித்த கப்பல் தற்போது கரையை நோக்கி இழுத்துச்செல்லபப்ட்டுள்ளது.
10 வருடங்களுக்கு முன்னர் யுத்த காலத்தில் கடல் புலிகளின் கப்பல்களுக்கும், கடற்படைக்கப்பல்களுக்குமிடையே காரசாரமான யுத்தம் இடம்பெற்ற பகுதியே கிழக்குக் கடற்பகுதியாகும்.
இங்கு புலிகளின் ஆயுதங்களை ஏற்றி வந்த கப்பல்கள் மட்டுமல்ல. மறுபுறத்தே கடற்படையினரின் கப்பல்களும் கடல் சமர்களின் போது மூழ்கடிக்கப்பட்டுள்ளன.