மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 11890 குடும்பங்களைச் சேர்ந்த 37ஆயிரத்து 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்இ 56 முகாம்களில் 2558 குடும்பங்களைச் சேர்ந்த 7241 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கி வருவதுடன், போக்குவரத்து தண்டிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான படகுசேவை நடைபெற்று வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளீதரன் தெரிவித்தார்.
இந்த சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 3 தினங்களாக பெய்துவந்த அடைமழையினால் மாவட்டத்திலுள்ள குளங்களில் நீர் நிரம்பி வழிய தொடங்கியதையடுத்து, அனைத்து குளங்களினதும் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டது. இதனால் வயல் நிலங்கள் மற்றும் தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியது.இதனையடுத்து மட்டக்களப்பு நகரின் புளியந்தீவு பிரதேசத்தை சுற்றியுள்ள களப்பு பகுதியிலுள்ள வாவிக்கரை வீதிகள் பிரதான பஸ்தரிப்பு நிலையம், மாநகர சபை கட்டிம் அரசாங்க விடுதிகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன், இந்த வீதிகளூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மட்டக்களப்பில் திருகோணமலை ஏ15 பிரதான வீதி 3ஆவது மைல் கல்லில் உள்ள வெள்ளக்குடி சந்தி அல்லது வைச்சந்தி என அழைக்கப்படும சந்தியில் இருந்து ஊறணி சந்தி வரைக்குமான வீதி வெள்ள நீரில் மூழ்கியதையடுத்து அதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.அவ்வாறே மட்டக்களப்பிற்கும் வவுணதீவுக்கும் இடையிலான வலையிறவு பாலத்தின் மேலால் வெள்ள நீர் பாய்ந்து வருவதால் அப்பிரதேசத்துக்கிடையிலானதும் மற்றும் புதூர், திமிலைதீவு, சேத்துக்குடா வீச்சுக் கல்முனை போன்ற பிரதேசங்களுக்கு இடையிலானதும் மண்டூர் வெள்ளாவெளிக்கும் இடையிலானதும் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றுக்கான படகு சேவை இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை தற்போது மழை குறைவடைந்துள்ளதுடன், பலத்த காற்று வீசுவதால் பல பாரிய மரங்கள் முறிந்து வீதிகளின் குறுக்கே வீழ்ந்துள்ளதை வெட்டி அகற்றும் பணிகளை மாநகர சபை தீயணைக்கும் படையினர் முன்னெடுத்து வருகின்றனர்இருந்தபோதும் தற்போது வெலிகந்தை மன்னம்பிட்டி பகுதிகளில் ரயில் தண்டவாளத்தின் மேலால் வெள்ள நீர் காரணமாக மட்டக்களப்பிற்கான ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதுடன், மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான பஸ்சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த பிரதேச செயலகம் மற்றும் இடர் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து சமைத்த உணவுகளையும் அவர்களின் நலன்புரிகளையும் மேற்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்தார்.