மட்டக்களப்பு பார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்

0
19

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பார் வீதியில் உள்ள பெற்றோலியம் கூட்டுத்தாபன அலுவலகத்திற்கு முன்பாக, வீதியோரம், முறையற்ற வகையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன், மோட்டார் சைக்கிள் மோதியே விபத்துச் சம்பவித்துள்ளது.

மோட்டர் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்தலத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு பார் வீதியில், போக்குவரத்திற்கு இடையூறாக, இரவு மற்றும் பகல் வேளைகளில், வாகனங்களை சிலர் தரித்துச் செல்வதாகவும், இதனால் விபத்துச் சம்பவங்களும் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.