வெள்ள அனர்த்தத்தால் மட்டக்களப்பு மாவட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்குடன், மட்டக்களப்பு முகத்துவார ஆற்றுவாய் வெட்டப்பட்டு, மேலதிக நீரை கடலுடன் இணைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில், சுமார் 2 ஆயிரம் ஏக்கர்களில் நெற் செய்கை முன்னெடுக்கப்படுகின்றது. அண்மையில் பெய்த கன மழையால், இப் பிரதேசங்களை அண்டியுள்ள காடுகளில் இருந்து, வெள்ள நீர், விவசாய நிலங்களுக்குள் உட்புகுந்துள்ளதால், நெற் செய்கை நீரில்
மூழ்கி, அழிவடையும் ஆபத்தைச் சந்தித்துள்ளது.
மாவட்ட செயலகம் உள்ளிட்ட கிழக்கு மாகாண ஆளுனரிடமும் மட்டக்களப்பு முகத்துவாரத்தை வெட்டி வெள்ள நீரை வெளியேற்றித்தருமாறு விவசாயிகள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இதனை கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுனர் அதிகாரிகளை அனுப்பி கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆற்றுவாய் வெட்டுவது தொடர்பான விசேட கூட்டமொன்று நேற்றுக் கூட்டப்பட்டு, ஆற்றுவாய் வெட்டுவதற்கான தீர்மானமும் எட்டப்பட்டது.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம், மட்டக்களப்பு மாநகர சபையின் ஒத்துழைப்புடன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மத்திய நீர்ப்பாசன திணைக்களம், மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் அதிகார சபையினரும் இணைந்து ஆற்றுவாய் வெட்டும் பணிகளை முன்னெடுத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.