மனித பாவனைக்கு உதவாத 30 ஆயிரம் கோதுமை மா மூடைகள் கைப்பற்றல்!

0
19

வெல்லம்பிட்டி, சேதவத்தை பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து மனித பாவனைக்கு உதவாத 30,000 கோதுமை மா மூடைகள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் நேற்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கோதுமை மா மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 25 கிலோ கிராம் நிறையுடைய கோதுமை மா மூடைகளே கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கோதுமை மா மூடைகள் பொதுமக்கள் பாவனைக்காக விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா  என்பது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த களஞ்சியசாலையிலிருந்து 25 கிலோ கிராம் நிறையுடைய 8 ஆயிரம் சம்பா அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த அரிசி மூடைகள் நீண்ட நாட்களுக்கு முன்னர் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டபோதும், இந்த அரிசி மூடைகள் சந்தைகளில் விநியோகிக்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, குறித்த களஞ்சியசாலை, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.