மறைந்த நடிகை மாலினியின் இறுதிக் கிரியை இன்று!

0
8

மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை இன்று (26) இடம்பெறவுள்ளது. அதன்படி, இறுதிக் கிரியை அரச அனுசரணையுடன் கொழும்பு 7 சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. ‘இலங்கை சினிமாவின் ராணி’ என்று அழைக்கப்படும் மாலினி பொன்சேகா கடந்த சனிக்கிழமை தனது 78ஆவது வயதில் காலமானார்.

மாலினி பொன்சேகாவின் பூதவுடல் இன்று காலை 8 மணிக்கு கொழும்பு 7 சுதந்திர சதுக்க வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அங்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பிற்பகல் 3.30 மணியளவில் அவர் கல்வி கற்ற களனி குருகுலே கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் கலைஞர்களால் பௌத்த மதச் சடங்குகளுக்காக கட்டப்பட்ட விசேட மேடைக்கு அவரது பூதவுடல் கொண்டுச் செல்லப்படவுள்ளது.

பின்னர் மத சடங்குகள் நிறைவுற்ற பின்னர், அவர் திரையுலகுக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் திரைப் பயண வாழ்க்கை குறித்து கலைஞர்களின் விசேட உரைகள் இடம்பெறவுள்ளன. பிற்பகல் 5.45 மணியளவில் மறைந்த நடிகை மாலினியின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இதேவேளை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை இடம்பெறவுள்ள காரணத்தால் சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, கிரியை நிகழ்வுகள் மற்றும் இறுதி ஊர்வலம் இடம்பெறுவதை முன்னிட்டு எந்தவொரு வீதியும் மூடப்படாது எனவும், இறுதி ஊர்வலம் பொது நிர்வாக அமைச்சு சந்தியிலிருந்து சுதந்திர மாவத்தை வழியாக சுதந்திர வளாகம் வரையில் பயணிக்கும் போது, சுமார் 15 நிமிடங்களுக்கு சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர மாவத்தை வரையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியை நிகழ்வுகள் நடைபெறும் போது, ​​அருகிலுள்ள சுதந்திர மாவத்தை மற்றும் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் செல்லும் பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.