மிழ் திரையுலகில் 1990-களில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டன. முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா 1994-ம் ஆண்டு ‘காதலன்’ படத்தின் மூலம் இணைந்தார்கள். தொடர்ந்து இவர்களது கூட்டணியில் வெளியான ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’ ஆகிய படங்களும், பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக ‘பேட்டராப்’, ‘ஊர்வசி ஊர்வசி’, ‘முக்காலா முக்காபுலா’, ‘வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா’ உள்ளிட்ட பாடல்கள் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்காகவும், பிரபுதேவாவின் நடனத்திற்காகவும் இன்றுவரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன.
இந்த நிலையில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா கூட்டணியில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. பிகைண்ட்வுட்ஸ் தயாரிப்பில் மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, அஜு வர்கிஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பை படக்குழு இன்று அறிவித்துள்ளது. இதன்படி ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘மூன்வாக்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘மூன்வாக்’ என்பது ‘பொப்’ இசை உலகின் மன்னர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும். ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.