மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தனுஷ் – அனிருத் இணைந்து பணிபுரியவுள்ளனர்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அந்தப் படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்த பல படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பாளராக பணிபுரிந்தார்.
தனுஷ் – அனிருத் கூட்டணிக்கென்ற இசையுலகில் ஒரு பெரிய ரசிகர் வட்டம் உருவானது. ஆனால், இந்தக் கூட்டணி ‘தங்கமகன்’ படத்துக்குப் பிறகு இணைந்து பணிபுரியவே இல்லை. தனுஷ் – அனிருத் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இணைந்து பணிபுரியமாட்டார்கள் என்று தகவல் பரவியது.
தனுஷ் மற்றும் அனிருத் இருவரிடமும் எப்போது இணைந்து பணிபுரிவீர்கள் என்ற கேள்விக்கு “விரைவில்” என்பதை மட்டுமே பதிலாகக் கூறிவந்தார்கள். தற்போது, இந்த விரைவில் என்ற வார்த்தை நிஜமாகியுள்ளது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போது, அனிருத் ஒப்பந்தமாகியிருப்பதையும் அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.