மன்னார் – முசலி கஜிவத்தை பண்ணைப் பகுதியில் அனுமதியின்றி மரக் களஞ்சியம் ஒன்றை நடத்தி வந்த பண்ணை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.மன்னார் – முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் உள்ள கஜிவத்தை பண்ணை காட்டுப்பகுதியில் அனுமதியின்றி மரக் களஞ்சியம் ஒன்றை நடாத்தி குறித்த களஞ்சியத்தில் மரக்குற்றிகளை சேமித்து வைத்திருந்த, கஜிவத்தை பண்ணைக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த களஞ்சியசாலையில் இருந்து பெருந்தொகையான மரத் துண்டுகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன் போது தேக்கு, முதிரை, பாலை மரங்களில் வெட்டப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சுமார் ஆயிரத்து 820 மரத் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேகநபரும் மேலதிக நடவடிக்கைக்காக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.