விஜய் சேதுபதி நடிக்கவுள்ள முத்தையா முரளிதரன் பயோபிக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்த் திரையுலகில் அதிகமான படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதிதான். அவருடைய நடிப்பில் ‘கடைசி விவசாயி’, ‘மாஸ்டர்’, ‘மாமனிதன்’, ‘உபென்னா’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் தயாராகியுள்ளன. ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘லால் சிங் சத்தா’, ‘துக்ளக் தர்பார்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.
இந்தப் படங்கள் போக முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய படம் என்பதால் சர்ச்சையும் உண்டானது.
இதில் எப்படி விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று கேள்விகள் எழுப்பினர். ஆனால், முத்தையா முரளிதரனாக நடித்தே தீருவது என்று விஜய் சேதுபதி உறுதியாக உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (அக்டோபர் 8) வெளியிடப்பட்டது. விரைவில் விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆகையால், இந்தப் படத்துக்கு ‘800’ எனத் தலைப்பிட்டுள்ளனர். ‘கனிமொழி’ படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவற்றை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.