மே. இ. தீவுகளுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் ஆதிக்கம்

0
17

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 211 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை, தனது முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெறும் 146 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 ரி – 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று 1 – 0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 71. 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 64 ஓட்டங்கள் எடுத்தார். மேற்கு இந்திய தீவுகள் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்கள், ஷமர் ஜோசப் 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அந்த அணி சார்பில் பிராத்வெய்ட் 33 ஓட்டங்களுடனும், கீசி கார்டி 19 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று 3ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மேற்கு இந்திய தீவுகள் அணியினர், பங்களாதேஷின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால், அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 146 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கீசி கார்டி 40 ஓட்டங்கள் எடுத்தார். பங்களாதேஷ் தரப்பில் நஹித் ராணா 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் 18 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் 3ஆம் நாள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இதன் மூலம் பங்களாதேஷ் 211 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணி சார்பில் ஜாக்கர் அலி 29 ஓட்டங்களுடனும், தைஜூல் இஸ்லாம் 9 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். மேற்கு இந்திய தீவுகள் தரப்பில் ஷமர் ஜோசப் 2 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். நாளை 4ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.