யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் மானி கட்டாயம்!

0
91

யாழ்ப்பாணத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளில் மீற்றர் மானி பொருத்துவது கட்டாயம் என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.  

அத்துடன், முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் எந்தப் பயணிகள் சேவையையும் தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்போது, குறித்த சங்கப் பிரதிநிதிகள், யாழ்ப்பாணத்தில் தற்போது தனியார் முச்சக்கரவண்டிகள் சேவையில் ஈடுபடுவதாக மாவட்ட செயலாளருக்கு அறிவித்தனர்.  

தனியார் முச்சக்கரவண்டிகள் குறைந்த கட்டணத்தை வசூலிப்பதனால்; தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளனர். 

 முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் மானி பொருத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு தாங்கள் மீற்றர் மானியை பொருத்திவரும் நிலையில், தனியார் நிறுவனத்தின் சேவை தங்களுக்கு வருமான இழப்பை ஏற்படுத்துவதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

மீற்றர் மானி பொருத்தப்பட்டு சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் மீற்றர் கட்டணத்துக்கு மேலதிகமாகச் கட்டணங்களை வசூலிக்கப்பதாக பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.  

இந்தநிலையில், தனியார் முச்சக்கரவண்டிச் சேவை தொடர்பில் இதுவரை எந்த முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

 இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் மீற்றர் மானி பொருத்தாத முச்சக்கரவண்டிகள் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் 800 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.