இலங்கையின் சர்வதேச பல்கலைக்கழக பட்டியலில் இருந்து ரஷ்யாவின் அரச பல்கலைக்கழகங்கள் நீக்கப்பட்டமை தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சர்வதேச பல்கலைக்கழக பட்டியலில் இருந்து ரஷ்யாவின் மூன்று அரச பல்கலைக்கழகங்கள் நீக்கப்பட்டமை தவறு என்று இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ளது.
எனவே இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று சபையின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஐந்து வருடங்களாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் ரஷ்யாவின் இந்த பல்கலைக்கழகங்களை இலங்கையின் சர்வதேச பல்கலைக்கழக பட்டியலில் இருந்து நீக்கியதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்திருந்தது.
இலங்கையின் கல்வி மற்றும் தொழில்முறை என்பவற்றுக்கு அமையவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மருத்துவ சபையின் பதிவாளர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ரஷ்ய தூதரகம் இந்த முடிவு குறித்து தமக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்ற அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையில், இதற்கான உரிய விளக்கத்தை தருமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மருத்துவ சபையிடம் கோரியிருந்தார்.
இவ்வாறான ஒரு நிலையில், ரஷ்யாவின் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு தவறு என்று இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.