26.8 C
Colombo
Tuesday, November 5, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடக்கு கிழக்கில் அநுர அலையும் சுமந்திரனும்!

இன்று நடைமுறையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ‘தலைவராக’ செயல்பட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியா பரணம் ஆபிரகாம் சுமந்திரன் நேற்றைய தினம் கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அநுர அலை ஒன்று வீசுவதாகவும் அது ஆபத்தானது என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்’, என்று கூறியிருக்கிறார். ‘தங்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் அதிகாரத்தை தமிழ் மக்கள் எங்களுக்கே தரவேண்டும். அநுர அலையை அடியோடு அகற்றிவிட வேண்டும்.

தமிழ் அரசு கட்சியை ஓர் அணியாக – பேரம்பேசும் சக்தியாக பாராளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலமாகவே தமிழ் மக்கள் தங்களது இலக்குகளை அடையமுடியும். அதற்கான ஆணையை எமது மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது’, என்றும் அந்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு முதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரவேசம் செய்த சுமந்திரன் பிறகு இரு பாராளுமன்ற தேர்தல்களில் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு இதுவரையில் பதினான்கு வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார்.

இந்தத் தடவை பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராக இல்லாமல் தமிழ் அரசு கட்சியின் வேட்பாளராகவே அவர் களமிறங்கியிருக்கிறார். இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ்க் கட்சிகள் பலவாறாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும், அவற்றிடையே சுமந்திரனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஓர் ஒற்றுமை இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். தாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை, சுமந்திரன் தோல்வியடைய வேண்டும் என்ற ஓர்மத்துடனும் பலர் இருக்கிறார்கள். உண்மையில், இந்தத் தேர்தலில் அவர் முன்னென்றும் இல்லாத வகையிலான சவாலை எதிர்நோக்குகிறார் என்பதில் சந்தேகமில்லை.

வௌ;வேறாகப் பிரிந்து தேர்தல் களத்தில் நின்றாலும் மனதளவில் தனக்கு எதிராக ஒற்றுமைப்பட்டு நிற்கும் மற்றைய தமிழ்க் கட்சிகளிடமிருந்து வரக்கூடிய சவாலைப் பற்றி பேசாமல் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே தங்களுக்கு பெரிய சவாலாக இருப்பது போன்று சுமந்திரன் நேர்காணலில் கருத்து தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ந்து வருகிறது என்பது உண்மையே.

அதை சுமந்திரன் கூறியிருப்பதைப் போன்று ஓர் ‘அநுர அலை’ என்று வர்ணிப்பது எந்தளவுக்கு பொருத்தமானது என்பது ஒரு முக்கியமான கேள்வி. தங்களிடம் வாக்குக் கேட்டு வரும் தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களிடம் தமிழ் மக்கள் ‘நாங்கள் இந்த முறை திசைகாட்டிக்குத்தான் வாக்களிக்கப் போகிறோம்’ என்று கூறுவதாக அறியமுடிகிறது. ஜனாதிபதி அநுரவுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருக்கிறது என்று பரவலாகப் பேசப்படுகிறது.

தெற்கில் மக்கள் காண விரும்பும் மாற்றத்துக்கு ஆதரவாக வடக்கு மக்கள் வாக்களிப்பதே விரும்பத்தக்கது என்ற தொனியில் ஜனாதிபதி தேர்தலின்போது அநுர பேசியதை தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் இனவாதத்தை அவர் தூண்டுவதாக ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியபோது அதை மறுதலித்து, ‘அநுர இனவாத நோக்கத்துடன் அவ்வாறு கூறவில்லை’, என்று அவருக்காக ஓடிச்சென்று முதலில் குரல் கொடுத்தவர் சுமந்திரன். இப்போது அவர் அதே அநுர அலையைத் தடுத்தேயாக வேண்டும் என்று சூளுரைக்கிறார்.

தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தமிழ் அரசியல் கட்சி களிடம் – அதுவும் குறிப்பாக தனது தமிழ் அரசு கட்சியிடம் இருக்கவேண்டும் என்ற அவரின் அக்கறையே அதற்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தமிழ்க் கட்சிகள் பல்வேறு கூறுகளாகப் பிரிந்து தங்க ளுக்குள் முட்டிமோதி தமிழ்த் தேசியவாத அரசியலை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருப்பதனால் தங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் படுமோசமாக சிதறுப்படப் போகிறது என்று அஞ்சும் தமிழ் மக்கள், தமிழ் கட்சிகள்மீது கடுமையாக வெறுப்படைந்திருக்கிறார்கள். தங்கள் மத்தியில் மாற்று அரசியல் சக்தி ஒன்று இல்லை என்பதாலேயே அநுர பக்கம் தமிழ் மக்கள் திரும்பிப் பார்க்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதை சுமந்திரன் மாத்திரமல்ல, மற்றைய தமிழ் கட்சிகளின் தலைவர்களும் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles