வீதி விபத்துக்களில் 06 பேர் பலி

0
14

நாட்டில் நேற்று (27) வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 06 பேர் உயிரிழந்தனர். 

இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதியில் இடங்கொட பகுதியில் நேற்று (27) மாலை பாணந்துறை திசையிலிருந்து இரத்தினபுரி திசை நோக்கிச் சென்ற இரும்பு கட்டிலுடன் பொருட்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, கிரியெல்ல வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 

உயிரிழந்தவர் எபிடவல, கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 78 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது. 

இறந்தவர் வீதியின் வலது புறத்தில் பயணித்தபோது, ​​அதே திசையில் பயணித்த குறித்த கெப் வண்டியில் ஏற்றப்பட்ட இரும்பு கட்டில், மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதற்கிடையில், கிராண்ட்பாஸ் வேல்ஷ் குமார மாவத்தைக்கு முன்னால் இங்குருகடே சந்தி திசையிலிருந்து ஆமர் பாபர் சந்தி திசை நோக்கி பயணித்த பிரைம் மூவர் வாகனம் ஒன்று நேற்று (27) மாலை மோதி இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். 

இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன் சடலம், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்துடன் தொடர்புடைய பிரைம் மூவரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் கல்முனை வீதியில் அட்டாளைச்சேனை பகுதியில் கல்முனை திசையிலிருந்து அக்கரைப்பற்று திசை நோக்கி பயணித்த டிப்பர் வண்டி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர், அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 

பாலமுனை பகுதியை சேர்ந்த 40 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்தார். 

சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

அதேநேரம் மினுவாங்கொட வெயங்கொட வீதியில் தேவலபல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனம் ஒன்றை முந்தி செல்ல முறப்பட்ட வேளையில் எதிர் திசையில் பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்தார். 

நிட்டம்புவ – ஹிம்புட்டியான பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார். 

அதேநேரம் பனாமுர – கமகந்த வீதியில் பட்டதிம்புர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று, செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 

பட்டதிம்புர – ஓமல்பே பகுதியை சேர்ந்த 34 வயதான நபரே விபத்தில் பலியானார். 

அத்துடன் உஹன, கஹட்டகஸ்யாய – மஹாகண்டிய வீதியில் கஹட்டகஸ்யாய பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாயில் விழுந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்தார். 

சம்பவத்தில் மஹாகண்டிய பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்தார். 

உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உஹன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.