ஹொரண வைத்தியசாலையில் அண்மையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான தாதி குறித்து தற்போது அதிகம் பேசப்படுகின்றது.
எவ்வாறாயினும் தனது வைத்தியசாலையில் இதுவரை குறித்த தாதி மாத்திரமே கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளாகி உள்ளதாக ஹொரண ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்படும் போலி தகவல்கள் குறித்து டொக்டர் அயந்தி ஜயவர்தன இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
´ஹொரண வைத்தியசாலையில் மேலும் 5 நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் 3 வைத்தியர்களும் அடங்குவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறான சகல தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். ஹொரண வைத்தியசாலையில் தாதி ஒருவருக்கு மாத்திரமே தொற்று ஏற்பட்டுள்ளது. 41 பேர் முதல் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு பி.சி.ஆர் பரசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஆகவே தற்போதைய நிலையில் ஹொரண வைத்தியசாலையில் எவருக்கும் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று இல்லை´ என்றார்.