25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அரசியல்வாதிகள் தேர்தலுக்கு மட்டும்தானா?

உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுவதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லை.
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற பின்னர்தான், ஏனைய தேர்தல்கள் நடைபெறுவதற்கான வாய்புகள் உண்டு.
உள்ளூராட்சி தேர்தல் இல்லையென்றவுடன் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் பலர் காணாமல் போய்விட்டனர்.
வாக்களித்த மக்கள் அவர்களில் பலரை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கின்றது.
உள்ளூராட்சி தேர்தலை முன்வைத்து தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் பலவாறான விடயங்கள் இடம்பெற்றிருந்தன.
தேர்தலில் தனித்து போட்டியிடும் நோக்கில் இலங்கை தமிழரசு கட்சி – தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குத்துவிளக்கு சின்னத்தில் தொடர்ந்தும் இயங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டது.
விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மணிவண்ணன் அணியுடன் இணைந்து தனியாக தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்தது.
தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் கட்சிகள் உள்ளூராட்சி தேர்தலை முன்வைத்து நான்கு அணிகளாகக் களமிறங்கின.
தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு நான்கு அணிகளும் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தன.
ஆனால், தேர்தல் நடைபெறாதென்னும் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அனைவருமே தங்களின் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டனர்.
குறிப்பாக குத்துவிளக்கு சின்னத்தில் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்பீட்டடிப்படையில் அதிகமான கட்சிகளை உள்ளடக்கிய அணியாக
இருந்தபோதிலும் கூட, உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமையைத் தொடர்ந்து கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் பக்கத்திலிருந்து எந்தவொரு செயல்பாடும் முன்னெடுக்கப்படவில்லை.
தமிழ்த் தேசிய கட்சிகளின் அரசியல் செயல்பாடு என்பது தேர்தலில் போட்டியிடுவது மட்டும்தானா? உண்மையில், அரசியல் செயல்பாடுகள் என்பது தேர்தலுக்கு அப்பால்பட்டது. அரசியல் இயங்குநிலையில் ஒரு சிறிய பகுதிதான் தேர்தல்.
ஏனெனில், தேர்தல் அரசியல் ஆட்டங்கள் இரண்டு மாதங்களுக்குள் முற்றுப்பெற்றுவிடும்.
மக்களுடன் ஊடாடுவதும், அவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் நோக்கில் உள்ளுக்கும் வெளியிலும் தொடர்ந்து செயல்படுவதில்தான் ஒரு கட்சியின் அரசியல் ஆளுமை தங்கியிருக்கின்றது.
ஆனால், நமது சூழலில் நடப்பதோ வேறு.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன், ‘மகுடிக்கு ஆடும் பாம்பு போல்’ ஆட்டம் போடும் கட்சிகளின் செயல்பாட்டாளர்கள் தேர்தல் முடிவுற்றவுடன் பெட்டிப்பாம்பாகி விடுகின்றனர்.
இந்தப் பின்னணியில் நோக்கினால், தமிழ்த் தேசிய கட்சிகளை எவ்வாறு வரையறுப்பது என்னும் கேள்வி எழுகின்றது.
ஏனைய கட்சிகளுக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்பங்கள் உண்டு.
2004ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தின் கீழ்தான் இயங்கியிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்த மக்கள் வீட்டுச் சின்னத்துக்கே வாக்களித்திருந்தனர்.
உண்மையில் மக்கள் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்தனரே தவிர, தமிழரசு கட்சிக்கு வாக்களிக்கவில்லை.
அவர்கள் வாக்களித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு.
ஆனால், தற்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு குத்துவிளக்கு சின்னத்தின் கீழ் இருக்கின்றது.
இந்த விடயங்கள் சரியாக மக்களை சென்றடையவில்லை.
மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன.
இதனை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்புள்ள கூட்டமைப்பின் அரசியல்வாதிகளோ, அடுத்த தேர்தல் திகதிக்காக வீடுகளில் காத்திருக்கின்றனர்.
ஆனால், இப்போது கூட்டமைப்பு எது?, தமிழரசு கட்சி எது? – என்று தெரியாமல் வாக்களிக்கும் மக்கள் குழம்பியிருக்கின்றனர்.
இதனை நிவர்த்திசெய்யும் வகையில், கூட்டமைப்பின் தலைவர்கள் மக்களை சந்திக்கவில்லை.
உண்மையில், அவர்கள் தொடர்ந்தும் மக்களை சந்தித்திருக்க வேண்டும்.
தேர்தல் நடக்கலாம் – நடக்காமலும் போகலாம் – அது வேறு விடயம்.
ஆனால், மக்களுடனான அரசியல் சந்திப்புகள் தொடரவேண்டும்.
மக்கள் அணி திரட்டப்பட வேண்டும்.
இது தொடர்பில் இனியாவது சிந்தித்தால் நல்லது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles