தேசிய மக்கள் சக்தியினர் கூட எதிர்பார்த்திராத வெற்றியொன்று அவர்களுக்கு கிட்டியிருக்கின்றது. இது உண்மையில் அவர்களுக்கு மகிழ்சியை கொடுத்திருக்குமா என்பதும் சந்தேகம்தான் – ஏனெனில் இப்போது அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளின் கைதியாகியிருக்கின்றனர். அவர்களால் சாதாரணமாக இதிலிருந்து தப்பிச் செல்ல முடியும்தான் ஆனால், அவ்வாறு தப்பிச் செல்ல முயற்சித்தால், அவர்களும் முன்னைய ஆட்சியாளர்கள் போன்று பத்தோடு பதினொன்றுதான்.
அநுரகுமார அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்பதை அவதானிப்பதில் தவறில்லை. பலரை அவதானித்து ஏமாந்து போன வரலாற்றைக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினம், இந்த அலையிலும் சிறிது காலம் மிதக்கட்டும் என்றுதான் தற்போதைக்கு சொல்லிவைக்க முடியும். ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தனது அக்கிராசன உரையில் – இனி இனவாதத்திற்கு இங்கு இடமில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார் – தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா, வடக்கு மக்கள் இனவாதத்தை கைவிட்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
அநுரவின் உரையிலும் அந்தத் தொனியே மேலோங்கியிருக்கின்றது. இங்கு நாம் கேட்க வேண்டிய கேள்வி, இனவாதத்திற்கான வரையறை என்ன? அதனை எவ்வாறு வரையறுப்பது? இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்னுமடிப்படையில் அவர்களுக்கான தனித்துவமான அரசியல் இருப்பைக் கோரிவருகின்றர். தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையைத்தான், ரில்வின் சில்வா இனவாதம் என்கின்றாரா? – தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு எதிராகத்தானா வடக்கு மக்கள் பெரும்பான்மையாக ஜே.வி.பிக்கு வாக்களித்திருக்கின்றனர்?
இதற்கு முதலில் பதிலளித்திருக்க வேண்டியது வடக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் ஆனால் அவர்களோ வெற்றிக்களிப்பை விகாரைகளுக்குள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். ரில்வின் சில்வாவின் கருத்தை தேசிய மக்கள் சக்தியில் எவருமே மறுதலிக்கவில்லை – அதுவே அநுரவின் அக்கிராசன உரையிலும் பிரதிபலிக்கின்றது. இலங்கையின் வரலாற்றில் மேற்கு சார்பான ஜக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில்தான், தமிழ் மக்களுக்கு எதிரான மோசமான இன ஒடுக்குமுறை அழித்தொழிப்பு நிகழ்ந்தது.
ஜக்கிய தேசியக் கட்சியின் மேற்குலக சார்பு, தாராளவாதப் பின்புலம் கொண்ட அவர்களுக்குள், தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதம் உள்ளுறைவதை தடுக்க முடியவில்லை. ஏனெனில், தென்னிலங்கை அரசியல் பாடசாலையில் படித்துத் தேறிய அனைவருமே இனவாதத்தை கூட்டியோ அல்லது குறைத்தோ – கடுமையாகவோ அல்லது மென்மையாகவோ பயன்படுத்துவதில் தேர்ச்சியுள்ளவர்களாக இருந்ததே இதுவரையான வரலாறு.இந்த வரலாற்றிற்கு மாற்றான எவ்வாறானதொரு ஆட்சியை அநுர வழங்கப் போகின்றார்? அதனை வழங்க அவர் முயற்சித்தால் அதற்கு தமிழ் மக்கள் உதவத்தான் வேண்டும்.
ஆனால், முதலில் அநுரகுமார தேசிய இனப்பிரச்னை ஒன்று நாட்டில் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டு, அதற்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை சிங்கள மக்களுக்குச் சொல்ல வேண்டும் – அதனை தீர்க்காமல் நாடு முன்னோக்கி பயணிக்க முடியாது என்னும் உண்மையை சிங்கள இளைஞர், யுவதிகளுக்குச் சொல்ல வேண்டும்.விகாரைக்குள் உட்புகுத்த வேண்டும் – அவ்வாறில்லாது, நாம் எல்லோரும் இலங்கையர்கள், ஒரு தாய் பிள்ளைகள் என்னும் வசனங்கள் பிரச்னையை முடிமறைக்குமே தவிர ஒரு போதும் தீர்க்காது. பிரச்சினையை முடி மறைத்துக் கொண்டு ஜக்கியம் பற்றிப் பேசுவதும் ஒரு வகையான இனவாதம்தான்.