31.3 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

அப்போது யுத்தம் நடந்துகொண்டிருந்த காலம்.
தெற்கின் பிரபல அரசியல்வாதி ஒருவர் சொன்னது இப்போது ஞாபகத்துக்கு வருகின்றது.
விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இராணுவத்துக்கு மிகப்பெரிய இழப்புக்கள் ஏற்பட்டுவிட்டால், உடனே தெற்கில் அது பற்றிய செய்திகள் வெளிவராமல் தடுப்பதற்காக, அல்லது அதனால் தெற்கில் பாரிய கலவரம் ஏதேனும் ஏற்படாமல் தடுப்பதற்காக இலங்கை உலகக்கிண்ணத்தை வெற்றிபெற்ற கிரிக்கெட் போட்டியை ரீ. வியில் மறுஒளிரப்புச் செய்துவிடுவோம்.
மக்கள் எல்லாம் அதனைப் பார்த்துக்கொண்டு மகிழச்சியில் இருப்பார்கள்.
அதாவது ஒரு பிரச்னை பூதாகாரமாக வெடிக்கின்றபோது மக்களை திசைதிருப்புகின்ற பாணி அது.
அதனை சில அரசியல் நெருக்கடிகள் ஏற்படுகின்றபோதும், அதனை மறைக்க இன்னுமொரு பிரச்னையை கிளப்பிவிடுவார்கள்.
அது அரசியலில் சாதாரண விடயம்தான்.
சில காலங்களுக்கு முன்னர், வடக்கில் எப்போதும் பேசு பொருளாக இருந்தது, தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் பற்றிய செய்திகள்தான்.
எல்லைதண்டி வந்து மீன்பிடிப்பது – அதுவும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவைப் படகுகளில் நூற்றுக்கணக்கில் வந்து மீன்பிடியில் ஈடுபடுவது, எமது மீன்வளத்தையே இல்லாமல் செய்துவிடுகின்ற அனர்த்தம் என்பதால் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.
இப்போது அதுபற்றிய குரல்களைக் காணவில்லையே, அவர்கள் இப்போது வருவதில்லையோ என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான், அண்மையில் வல்வெட்டித்துறை வரை பல படகுகள் அத்துமீறியது மாத்திரமன்றி, நமது மீனவர்களின் படகுகளையும் சேதப்படுத்திய செய்தி வெளிவந்தது.
அந்த மீன்பிடியின் பின்னால், சில அரசியல்வாதிகள் இருப்பதும், அவர்களே இந்த நூற்றுக்கணக்கான இழுவைப் படகுகளுக்கும் சொந்தக்காரர்கள் என்பதையும் இந்தப் பத்தியில் முன்னரும் பல தடவை சொல்லிவந்திருக்கின்றோம்.
இப்போது, வடக்கில் அதைவிட முக்கியமான பிரச்னையாக இருப்பது இந்தியாவிலிருந்து வரும் இழுவைப் படகுகள் அல்ல.
அதில் வரும் போதைப் பொருள்கள்தான்.
இவ்வாறு போதைப்பொருட்களின் வருகை வடக்கில் மாத்திரமன்றி முழு நாட்டையும் இப்போது உலுப்பி எடுக்கின்றது.
மேலே சொன்னதுபோல, ஒரு பிரச்னையை மறைக்க இன்னுமொரு பிரச்னையை கையில் எடுப்பதுபோல, மீனவர் பிரச்னைக்கு பதிலாக போதைப்பொருள் பிரச்னையை எடுத்திருக்கிறோமே தவிர மீனவர் பிரச்னை இப்போதும் அப்படியே இருந்துகொண்டு தான் இருக்கின்றது.
ஆனால், அதே மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு பதிலாக போதைப்பொருளை கொண்டுவந்தால் அதிக இலாபம் கிடைக்கும் என்று நினைக்கிறார்களோ என்னவோ? தினமும் கேரள கஞ்சா எங்காவது ஓர் இடத்தில் பிடிபட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.
ஆனால், இன்றுவரை அதனை இங்கு கொண்டுவரும் எந்தப் பெரிய ‘முதலை’யும் பிடிபட்டதாகத் தெரியவில்லை.
நேற்றுமுன்தினம் தமிழக தினமலர் பத்திரிகையில் வந்திருந்த செய்தி இது.
‘இராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற, 360 கோடி ரூபாய் மதிப்பிலான, ‘கோகைன்’ போதைப் பொருளை, கடற்படை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, கீழக்கரை நகராட்சி தி.மு.க. கவுன்சிலர், முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டனர்.’
இதுதான் அந்தச் செய்தி.
அந்தச் செய்தியை வழக்கமான செய்திகளில் ஒன்றாக கடந்து செல்ல முடியவில்லை.
அங்கே கைப்பற்றப்பட்டிருப்பது, இந்திய ரூபாய்களில் முன்னூற்றி அறுபது கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள்.
அவை இலங்கைக்கு ஒரு நாட்டுப்படகில் கடத்திச் செல்லப்படவிருந்ததாகவும் பொலிஸார் தமது விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர் என்கின்றது செய்தி.
முன்னூற்றி அறுபது கோடி என்பது இலங்கையில் இலங்கை ரூபாய்களில் ஆயரத்தி அறுநூறு கோடிகளுக்கும் அதிகம்.
அத்தனை கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளை ஒருவர் கடனாக இங்குள்ள ஒருவருக்கு கொடுக்கப்போவதில்லை.
அப்படியெனில் இத்தனை கோடி ரூபாயை அதில் முதலிட்டு இலங்கைக்கு கொண்டுவரக்கூடிய வர்த்தகர்கள் யார் என்பதை கண்டறிவது இலங்கைப் பொலிஸாருக்கு சிரமமானதாகவும் இருக்காது.
இந்த கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், தமிழக ஆளும் கட்சியான தி. மு. கவினர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.
அவர்களிடம் இலங்கை பொலிஸாரும் விசாரணை நடத்தி, அவர்களின் இங்குள்ள தொடர்பைக் கண்டறிய வேண்டும்.
இது நடக்காது என்பதும் நமக்கு தெரியாததல்ல.
ஏனெனில், இத்தனை பெரிய தொகையோடு விளையாடி இந்த வர்த்தகத்தில் இருப்பவர்களும் சாதாரணமானவர்களாக இருக்கமுடியாது.
ஆனால், அது குறித்து இந்த சமூகத்தை நேசிக்கின்ற தலைவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காகவே இந்தப் பத்தி.!

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles