33 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

கனடாவில் தற்போது வாழும் எமது ‘ஈழநாடு’ உறவு எஸ். ஜெகதீசன், யாழ்ப்பணத்தில் பணியில் இருந்த ஒருநாள்.
அப்போது ஆசிரியராக இருந்த அதிபர் சபாரத்தினம், அன்றைய ஆங்கில பத்திரிகை ஒன்றைப் படித்துவிட்டு, ‘அட அதுக்குள்ள போய்ச் சேர்ந்திட்டார்…’ என்று கூறியவாறு ‘இதை செய்தியாக்கி குடும்’ என்று ஜெகதீசனிடம் கொடுத்துவிட்டு தனது இருக்கைக்கு சென்றுவிட்டார்.
கொழும்பில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தனது அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் என்பது தான் செய்தி.
அவருக்கு (அவர் பெயரைப் போட்டு) அறுபது என்பது தான் செய்திக்கு தலைப்பு.
ஆனால், தலைப்பை படித்துவிட்டு சபாரத் தினம் மாஸ்ரர், அவர் அறுபதில் மறைந்து விட்டார் என்று எண்ணிக் கொண்டு, அதனை செய்தியாக்க சொல்ல, ஜெகதீசனும், அவர் அறுபது வயதில் காலமானார் என்று செய்தியை எழுதிக் கொடுத்து விட்டார்.
ஜெகதீசன் பத்திரிகையைப் படித்துதான் செய்தியை எழுதினார்.
ஆனால், அவர் இறந்துவிட்டார் என்று சபாரத்தினம் மாஸ்ரர் சொன்னதுதான் ஜெகதீசனின் மனதில் ஓடிக்கொண்டிருந்ததால், அவரும் அவ்வாறே செய்தியை எழுதிக்கொடுக்க அது பத்திரிகையிலும் பிரசுரமாகிவிட்டது.
அடுத்தநாள், அந்த பாதிரியாரே கொழும்பிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு, தான் இறந்தால் எப்படியிருக்கும் என்பதை உங்கள் பத்திரிகை எனக்கு உணர்த்திவிட்டது என்றார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, மீண்டும் மாவட்ட அபிவிருத்தி சபைகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க, உடனே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கு தான் தயார் என்று பதிலளிக்க இப்போது அதுவே பேசு பொருளாகியிருக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எம். பியுமான மைத்திரிபால சிறிசேன, ‘நாட்டின் கிராமப்புற மக்களுடன் இணைந்து செயல்படுவதில் மாவட்ட அபிவிருத்தி சபைகள் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும்.
கூடுதல் செலவுகள் இன்றி, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்களிப்புடன் சபைகள் இயங்க முடியும் – என்றும் கூறி அதனை அமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.
மைத்திரிபாலவுக்கு பதிலளித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு தயார் என்று கூறினார்.
அதாவது மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அமைக்க தயார் என்று ஜனாதிபதி சொன்னாரே தவிர, மாகாண சபைகளை இல்லாமல் செய்துவிட்டு மாவட்ட அபிவிருத்தி சபைகளை அறிமுகப்படுத்தத் தயார் என்று சொல்லவில்லை.
ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்ட சில நாட்களிலேயே மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்கி – அதன் தலைவர்களை நியமிக்க விரும்பியிருந்தார்.
அப்படி மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களை நியமிக்கின்றபோது வடக்கில் கூட்டமைப்பினருக்கே வழங்க அவர் விரும்புகின்றார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் அப்போது இந்த ஊர்க்குருவிக்கு தகவல் தந்திருந்தன.
அப்படியொரு திட்டத்தோடு இருந்தவருக்கு மைத்திரியின் அழைப்பு தனது திட்டத்தை ஒத்ததாக தெரிந்திருக்கலாம்.
அதனால் அவர் அதற்கு தான் தயார் என்று அறிவித்திருக்கலாமோ என்று இது பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்த ஓர் ஊடகரிடம் கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார், ஆனால் மைத்திரிதான் தனது பேச்சில், ஜே. ஆர். கொண்டுவந்த மாவட்ட அபிவிருத்தி சபைகளை என்று விளக்கமாக உரையாற்றியிருந்தாரே என்றார்.
அப்போது, ஜெகதீசன் செய்தி எழுதிய சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.
ரணில் முழு பேச்சையும் கேட்டுவிட்டுத்தான் பதிலளித்தாரா என்று அறிய, அன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட எம். பி. ஒருவரிடம் பேசினேன்.
ஜனாதிபதி ரணில் பாராளுமன்ற சபா மண்டபத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் போதுதான், மைத்திரி பேசினார், கதவுவரை சென்றவர் திரும்பி வந்து தனது மைக்கை ‘ஒன்’ பண்ணிவிட்டு தானும் அதற்கு தயார் என்று கூறிவிட்டு போய்விட்டார் என்றார்.
ஆக, ரணிலைப் பொறுத்தவரை அவர் மனதில் இருந்ததெல்லாம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை பலப்படுத்துவதுதான்.
தனது திட்டத்துக்கு வேறு ஒருவரும் ஆதரவு தெரிவிக்கின்றபோது அதனை இறுகப்பிடித்துவிடுவோம் என்று நினைத்திருக்கலாம்.
இப்போது அவர் இருபத்திநான்கு மாவட்டங்களுக்கும் தலைவர்களை அதிகாரங்களுடன் நியமிக்கின்றபோது, இந்த செலவீனங்கள் தேவையா என்று யாரும் கேள்வி எழுப்ப முடியாதென்று அவர் கருதியிருக்கலாமோ? இப்போது ஜனாதிபதி ஊடகப்பிரிவும் ஜனாதிபதி எதனைக் குறிப்பிட்டார் என்று விளக்கமளித்திருக்கின்றது.
மாகாண சபைகள் கலைப்பு தொடர்பில் ஜனாதிபதி எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்றும், நிறைவேற்று தீர்மானங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் சரியான ஒருங்கிணைப்பைப் பேணுவதற்கான களமாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் செயல்படும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது சரி, எமது தமிழ் கட்சிகள் எல்லாம் மாகாண சபைகளுக்கு பதிலாக மாவட்ட அபிவிருத்தி சபைகளா என்று கேட்டு பொங்கி எழுந்திருந்ததை கடந்த இரண்டு நாட்களிலும் காணமுடிந்தது.
நமக்குத்தான் மாகாண சபைகளே தேவையில்லையே.
சமஷ்டி தீர்வை தவிர வேறு எதையும் தொட்டுப்பார்க்கவும் விரும்பாத நமக்கு மாகாண சபை இருந்தாலென்ன, மாவட்ட சபை இருந்தாலென்ன? சமஷ்டி கிடைக்கும்வரை நாம் ஓயப்போவதில்லைத்தானே.!

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles