30 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

நடக்கவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழரசுக் கட்சிக்கு யாழ்ப்பாண மாவட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட முகவர் இல்லை என்ற தகவலை
நேற்று இந்தப் பத்தியில் தந்திருந்தேன்.
சட்டம் தெரிந்தவர்களே சட்டத்தைத் தெரிந்துகொள்ளாமலோ அல்லது அதிமேதாவித்தனத் தாலோ கோட்டை விட்டுவிடுவது சகஜம்தான்.
ஆனால், அதனைப் படித்து விட்டு ஒரு வாசகர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
‘இதுதான் கடிதத்தை வாங்கி வைத்துக்கொண்டு உரிய நேரத்தில் கொடுக்கத் தவறியதால் ஏற்பட்டது.
ஆனால், இதைவிட சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இன்று நேற்றல்ல, கடந்த இரண்டாயிரத்து பதினோராம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி தேர்தலிலேயே நடந்திருந்ததே தெரியாதா?’ என்ற கேள்வியையே தலைப்பாகக்கொண்டு அந்த மின்னஞ்சல் வந்திருந்ததால், ஆச்சரியத்துடன் படித்தேன்.
அந்தத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று உள்ளூராட்சி சபைகளுக்குமாக வேட்பு மனுக்களை அந்த மாவட்டத்தின் எம். பியான சிவஞானம் சிறீதரன் தயார் செய்து வைத்திருந்தார்.
அப்போது, அரசியலுக்கு அவர் வந்து மூன்று மாதங்கள்.
அவருக்கு பாடசாலை நிர்வாகம் தொடர்பான அலுவல்கள் என்றால் அவை அத்துபடி.
ஆனால் – தேர்தல், வேட்பு மனு என்பது புதிய விசயம்.
ஆனாலும் மாவட்டத்தின் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முகவரான சிறீதரன் எம்.பி. அந்த மூன்று சபைகளுக்குமான வேட்பாளர் நியமனப்பத்திரங்களை தயார் செய்து வைத்திருந்தார்.
அவரின் அலுவலகத்துக்கு வந்த சுமந்திரன் எம்.பியிடம் அவை சரிபார்க்கக் கொடுக்கப்பட்டன.
அவரும் அரசியலுக்கு வந்து சில மாதங்கள்தான்.
ஆனாலும் அவர் ஒரு சட்டத்தரணி.
அனுபவம் உள்ளவர் என்ற நம்பிக்கை சிறீதரனுக்கு.
அவரும் எல்லாவற்றையும் சரி பார்த்த பின்னர் அதனை அன்றைய தினமே தாக்கல் செய்யலாம் என்றார்.
ஆனால், அன்று அட்டமி நவமி.
அதனைத் தவிர்த்து மறுநாள் தாக்கல் செய்யவே சிறீதரன் விரும்பியபோதிலும், கிறிஸ்தவரான சுமந்திரனுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இருக்காதுதானே.
அவரோ வில்லங்கமாக அன்றே தாக்கல் செய்துவிடுவோம் என்று அடம்பிடித்ததால், இரண்டு சபைகளுக்கு அன்றைய தினம் தாக்கல் செய்வதென்று முடிவாயிற்று, சிறீதரனும் சுமந்திரனுமாக சென்று வேட்பாளர் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்துவிட்டனர்.
ஆனால், இவர்கள் அதனை தாக்கல் செய்த உடனேயே அவை தெரிவத்தாட்சி அலுவலரால் நிராகரிக்கப்பட்டு விட்டது.
காரணம் வேறு ஒன்றுமில்லை, அந்த நியமனப்பத்திரத்தில் இருந்த அதிகாரமளிக்கப்பட்ட முகவரின் கையெழுத்தை ஒரு சமாதான நீதவானைக் கொண்டு உறுதிப்படுத்த தவறியிருந்தனர்.
அப்போது, ஆனந்தசங்கரி ஐயாவின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பங்காளிக் கட்சி.
இதனால் அவசரம் அவசரமாக அவரின் கட்சியின் பெயரில் கூட்டமைப்பு போட்டியிடுவதற்காக அந்த இரண்டு சபைகளுக்கும் புதிய வேட்பாளர் நியமனப் பத்திரங்களை தயார்செய்து மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
அதாவது, கூட்டமைப்பு அந்த உள்ளூராட்சி தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு சபைகளில் ஆனந்தசங்கரி ஐயாவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு சபைகளிலும் அமோக வெற்றிபெற்றது.
இந்தத் தகவல்களை விலாவாரியாக எழுதியிருந்த அந்த வாசகர், இன்னுமொரு விசயத்தை சுட்டிக்காட்ட மறந்து விட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த இரண்டாயிரத்து நான்காம் ஆண்டிலிருந்து தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்திலேயே அனைத்து தேர்தல்களிலும்
போட்டியிட்டு வருகின்றது.
அதனால்தான் தமிழரசுக்காரர்கள் ஏதோ தமது சின்னத்துக்காகத்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.
கூட்டமைப்பை பதிவுசெய்து அதற்கான தனியான சின்னம் ஒன்றைப் பெற்று போட்டியிடவேண்டும் என்று பங்காளிக்கட்சியாக இருந்த ஈ. பி. ஆர். எல். எவ். காலத்திலிருந்து தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டுவந்தபோதிலும், தமது முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதாலும், அந்த சின்னத்தில் கேட்டால்தான் வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கையிலும் தமிழரசுக்காரர்கள் விடாப்பிடியாக அதனை மறுத்துவந்தனர்.
ஆனால், கிளிநொச்சியில் வேட்பாளர் நியமனப்பத்திரங்கள் நிராகரிக்கப்பட, அவசரம் அவசரமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டே வெற்றியடைய முடியும்
என்றால் இங்கே சின்னம் ஒரு பொருட்டே இல்லை என்பது அப்போதே நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதை அந்த வாசகர் ஏனோ குறிப்பிடத் தவறிவிட்டார்.
கூட்டமைப்புக்கு இனி நிரந்தரமான சின்னம் – குத்துவிளக்கு கிடைத்துவிட்டதால், இந்தத் தேர்தலுக்கு பின்னர், தமிழரசும் கூட்டமைப்போடு சேர்ந்து இயங்க
வந்தாலும் அந்த புதுச்சின்னத்தில் போட்டியிட்டாலும் வெற்றி அடையலாம்தானே?!

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles