25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவராக இருந்தவர் என். நடராஜன்.
அவர் எந்த விழாவில் கலந்துகொண்டாலும் தனது பேச்சை ஆரம்பிக்கின்றபோது மேடையில் இருக்கின்ற பிரமுகர்களின் பெயர்களை தனித் தனியே பெயர், பதவி நிலை சொல்லி விளித்துப் பேசுவார்.
அத்தோடு நின்றுவிட்டால் பரவாயில்லை விழா மண்டபத்தில் இருக்கும் தனக்குத் தெரிந்த பிரமுகர்களின் பெயர்களை எல்லாம் சொல்லி அவர்களையும் விளித்தே தனது பேச்சைத் தொடங்குவார்.
சில வேளைகளில் பல நிமிட நேரத்தை அதற்கு எடுத்துவிடுவார்.
ஒருநாள் அவரோடு பேசிக் கொண்டிருந்தபோது, அப்படி ஏன் எல்லோரையும் பெயர் சொல்லி நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று அவரிடமே கேட்டேன்.
அவர் சொன்னார், ‘மரியாதை கொடுக்க வேண்டியவர்களுக்கு நாம் கொடுத்தால் தானே மற்றவர்களிடமிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையை எதிர்பார்க்கமுடியும்’ என்றார்.
சில மாதங்களுக்கு முன்னர், யாழ்ப்பாண கலாசார நிலையம் திறந்து வைக்கப்பட்டது – கடைசியாக நடந்த திறப்பு விழாவல்ல.
அதற்கு முன்னதாக அலரி மாளிகையில் இருந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும் இணைந்து திறந்துவைத்தனர்.
அந்தத் திறப்புவிழாவுக்கு யாழ்ப்பாணத்திலிருந்த முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு மண்டபத்தில் அமர்த்தப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு அல்லாமல் நீண்ட காத்திருப்புக்குப் பின்னரே வைபவம் ஆரம்பமானது.
ஆனால், அந்தத் தாமதத்திற் காக ஒரு சிறிய வருத்தமும் தெரிவிக்கப்படவில்லை.
மண்டபத்திலிருந்த யாழ்ப்பாணப் பிரமுகர்களுக்கு அவர்கள் வழங்கிய ‘மரியாதை’ அப்போது தெரியவந்தது.
அந்த வைபவம் முடிந்த பின்னர் இந்தப் பத்தியிலும் அது பற்றி எழுதியிருந்தது வாகசர்களுக்கு நினைவிருக்கலாம்.
அண்மையில், இந்திய குடியரசு தின வைபவம் அதே மண்டபத்தில் நடைபெற்ற போதும், முதல் வரிசையில் அதிவிசேட பிரதிநிதிகள் அமரவைக்கப்பட்டிருந்தனர்.
அந்த வரிசையில் கத்தோலிக்க குருவானவரும்கூட அமர்ந்திருந்தார்.
அவர்கள் அருகே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் குருக்களும் சென்று அமர்ந்திருந்தபோது, அவரை அணுகிய தூதரக அதிகாரி ஒருவர் அவரை பின் வரிசைக்கு அனுப்பி வைத்தார்.
அப்படி இவர் அங்கிருந்து பின் வரிசைக்கு அனுப்பப்பட்ட போது, யாரோ அதிவிசேட பிரமுகருக்கு அந்த இடம் தேவைப் படுவதால் அவர் எழுப்பப் பட்டிருக்கலாம் என்று சமாதானமடைந்து கொண்டபோதிலும் விழா முடிவடையும் வரை அந்த
ஆசனம் காலியாகவே இருந்தது.
அப்போதுதான், இந்துக்களுக்கு அதுவும் ஓர் இந்து மதகுருவுக்கு வழங்கப்பட்ட ‘மரியாதை’ வெளிச்சத்துக்கு வந்தது.
ஏன் இந்துக் குரு ஒருவருக்கு முன் ஆசனம் வழங்கப்படவில்லை என்பது இன்றுவரை தெரியவில்லை.
ஒரு மேடையில் பிரமுகர்கள் அமர்ந்திருந்தால் அந்தப் பிரமுகர்களிடையே ஒரு தரவரிசை இருக்கும்.
அதில் யாருக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதில் எல்லோரும் அவதானமாக இருப்பார்கள்.
அந்த விழாவில் ஒருவர் பிரதம விருந்தினராக இருந்தாலும், விழாவை தொடக்கி வைக்கின்றபோது மங்கள விளக்கேற்றுவதாக இருக்கட்டும் அல்லது வாழ்த்துரையாக இருக்கட்டும் எதிலுமே மத குருக்களை முதன்மைப்படுத்துவதுதான் நமது மரபாக இருக்கின்றது.
அதிகம் ஏன் ஜனாதிபதி கலந்துகொள்கின்ற விழா என்றாலும்கூட மங்கள விளக்கேற்றுவதற்கு மதகுருக்களுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள்.
அண்மையில், யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் சிலை திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் ஆறு. திருமுருகனார் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிலையை திரைநீக்கம் செய்து திறந்து வைத்தார்.
அந்த வைபவத்துக்கு – அதனை திறந்துவைக்க, பொருத்தமானவர் அவர் என்பதில் யாருக்கும் கருத்து
வேறுபாடு இருக்காது.
ஆனால், அந்த விழாவை குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைப்பதற்கு மேடையில் இருந்த நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் முதல்வர் பலருக்குப் பின்னராகவே அழைக்கப்பட்டமை அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
திறந்து வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையில் – திருநீறு பூசியிருந்தமை பற்றி இன்று சமூக வலைத்தளங்களில் பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அதனை இந்துத்துவ திணிப்பு என்றும் விமர்சிக்கிறார்கள்.
ஆனால், இந்துக்களின் – சைவர்களின் ஆன்மிகத் தலைவர்போல இன்று யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டிருக்கின்ற ஆதீனத்துக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.!
இந்த இலட்சணத்தில் பௌத்தமும் கத்தோலிக்கமும் சைவத்தை அழிக்க முனைகின்றது என்று வேறு கூக்குரலிடுகின்றார்கள்.
சைவத்தை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.!

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles