33 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

‘கோட்டா கோ ஹோம்’ போராட்டக்காரர்கள், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை மட்டும் வீட்டுக்குப் போகச்சொல்லிக் கேட்கவில்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பின்னர் நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் தாங்கள் வழங்கிய ஆணையை மீளப்பெற்று புதிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்றே கோரிக்கை வைத்தார்கள்.
ஆனால், இது ஒரு ஜனநாயக நாடு.
அதற்கென்று ஓர் அரசியலமைப்பு இருக்கின்றது.
அதனை மீறி எதனையும் செய்யமுடியாது என்று வாதிட்டுக்கொண்டு, அதன் உதவியோடு ஆட்சிக்கு வந்தார் ரணில் விக்கிரமசிங்க.
நாட்டில் உடனடியாக ஒரு தேர்தல் நடந்தால் தமது கட்சி படுதோல்வி அடையும் என்பதைத் தெரிந்துகொண்ட ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன, அரசியலமைப்பை துணைக்கு அழைத்துக் கொண்டு, தமது அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியது என்னவோ உண்மைதான்.
ஆனால், அன்று இருந்த நிலையில் தேர்தல் நடைபெற்றிருந்தாலும் யார் வெற்றி பெற்றிருந்தாலும் நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பியிருக்குமா என்பது தெரியவில்லை.
நாட்டைப் பொறுப்பேற்க வாருங்கள் என்று கோட்டாபய முதலில் அழைத்தது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைத் தான்.
ஆனால், அந்த நெருக்கடியான நேரத்தில் அந்தப் ‘பாரத்தை’ சுமக்க அவர் தயாராக இருக்கவில்லை.
அதுவே அவரை ஒரு பலவீனமான தலைவர் என்று வெளிச்சம் போட்டுக்காட்டியது என்பது வேறு சங்கதி.
‘கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிரித்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்வதுபோல’ ரணிலுக்கு தெய்வம் கூரையைப் பிரித்துக் கொடுத்தது.
அந்த நேரத்தில் அவரை விட்டால் அந்தப் பாரத்தைச் சுமக்கவேறு யாரும் நாட்டில் இல்லைஎன்றுகூட சொன்னவர்களும் உண்டு.
இன்று நாடு முன்னர் இருந்ததை விட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுகொண்டிருக்கின்றது.
மீண்டுவிட்டது என்பதல்ல – மீண்டுகொண்டிருக்கின்றது.
ஆளும்கட்சி மக்களின் ஆதரவை இழந்துவிட்டது என்னவோ உண்மை என்றாலும், எதிர்க்கட்சிகளிடையே அவர்களின் ஆதரவு இப்போது என்ன நிலையில் இருக்கின்றது என்பது தெரியவில்லை.
பல கருத்துக் கணிப்புகள், ஜே. வி. பியும் ஐக்கிய மக்கள் சக்தியும் அண்ணளவாக ஒரே ஆதரவு தளத்தைக் கொண்டிருப்பதாவே தெரிவித்திருந்தன.
உள்ளூராட்சி தேர்தல் நடை பெற்றால், ஜே. வி. பி. முப்பத்தி இரண்டு வீத ஆதரவை பெறும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி முப்பத்தியொரு வீத ஆதரவை பெறும் என்றும் கடைசியாக நடத்தப்பட்ட சுயாதீன கருத்துக் கணிப்புகள் தெரிவித்ததாக கூறப்பட்டது.
இதனால்தான் இந்த இரண்டு கட்சிகளுமே உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தவேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கின்றன.
தத்தமது ஆதரவுத் தளத்தை அறிய இதனை ஒரு பரீட்சைக்களமாக அவர்கள் பார்க்கின்றனர்.
அதனால் ஆங்காங்கே ஒவ்வொரு கட்சிகளும் சில உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றலாம்.
ஆனால், இன்றிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்முறை அவர்கள் எங்குமே நிலையான ஆட்சியை அமைக்க இடம் தரப்போவதில்லை.
கடந்த இரண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஐம்பத்தி ஐந்து லட்சம் வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்ற பொதுஜன பெரமுனவே பல சபைகளில் நிலையான ஆட்சியை அமைக்க முடியவில்லை.
இருந்தபோதிலும் உள்ளூராட்சி தேர்தலை நடத்தி பொதுஜன பெரமுனவை தோல்வியடையச் செய்யவேண்டும் என்பதிலேயே எதிர்க்கட்சிகள் குறியாக இருக்கின்றன.
அதன் மூலமே அடுத்து வரும் தேர்தல்களில் தாம் சுலபமாக வெற்றி பெறலாம் என்று அவர்கள் கணக்குப்போடலாம்.
இப்போது, அரச தரப்பிலிருந்து அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த ரணில் விக்கிரமசிங்க தயாராகிவிட்டாரென அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
மக்கள் ஆணை இல்லாத ஒருவர் ரணில் என்றும் அவர் ஆட்சி செய்வதற்கே அருகதையற்றவர் எனவும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறிவந்தனர்.
இப்போது, அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் என்றும் அதுவே இந்த நாட்டில் நடக்கும் முதலாவது தேர்தல் எனவும் அரச தரப்பு கூறுகின்ற
போது, அதனை எதிர்க்கட்சிகள் வரவேற்கும் என்று பார்த்தால்.
அப்படி ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்கின்றன.
அடுத்த ஆண்டு நவம்பரிலேயே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
ஆனால், ஜனாதிபதி விரும்பினால் ஓராண்டு முன்னதாகவே நடத்தலாம்.
அதாவது இந்த ஆண்டு நவம்பருக்குப் பின்னர் எப்போதும் அவர் நடத்தலாம்.
அவ்வாறு முன்கூட்டியே தேர்தலை நடத்தப்போவதாக ரணில் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதனையே எதிர்க்கட்சிகள் இப்போது கண்டித்திருக்கின்றன.
அதிலும் வேடிக்கை என்னவென்றால், அடுத்து ஒரு தேர்தல் நடந்தால் தாங்களே ஆட்சிக்கு வருவோம் என்று முழக்கமிடும் ஜே. வி. பியும் ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ரணிலுக்கு அதிகாரம் இல்லை என்கின்றது.
இந்த நாட்டில் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால், மூன்று வேட்பாளர்கள் களத்தில் நிற்பது நிச்சயமானது.
ரணில், சஜித், அநுரகுமாரவே அவர்கள்.
மைத்திரி, டலஸ், விமல் அணியிலிருந்தும் ஒருவர் போட்டியிடலாம்.
அப்படி நால்வர் போட்டியிட் டால் அவர்களில் யார் ஜனாதிபதி பதவிக்குப் பொருத்தமானவர் என்று மக்களிடம் கேட்டால் என்ன சொல்லுவார்கள் என்பது இரகசியமானதல்ல.
அதனால்தானோ என்னவோ முதலில் உள்ளூராட்சி தேர்தல்தான் வேண்டும் என்றும், ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியயே நடத்துவதற்கு ரணிலுக்கு அதிகாரம் இல்லை எனவும் சொல்கிறார்களோ என்னவோ.!

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles