32 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

ஓர் ஊரில் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார்.
தன் வேலைக்காரனை எப்பொழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரின் வழக்கம்.
ஒருநாள் தன் வேலைக்காரனிடம் ஐநூறு ரூபாய் கொடுத்து சமையல் செய்வதற்கு தேவையான எண்ணெயை வாங்கி வரச் சொன்னார்.
வேலைக்காரனும் கடைக்குச்சென்று ஐநாறு ரூபாய் பெறுமானமுள்ள எண்ணெய் ரின் ஒன்றை வாங்கி வந்தான்.
வியர்த்து விறுவிறுத்து வீட்டுக்குள் நுழைந்த அவனை சந்தேகத்துடன் பார்த்த பணக்காரர், ‘ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய்’, என்று கேட்டு, எண்ணெய் ரின்னை பார்த்தார்.
எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது.
ஏன் என்று கேட்டார்.
அதற்கு வேலைக்காரன், ‘ரின்னின் அடியில் ஓட்டை இருந்தது நான் வாங்கிவிட்டு வெளியே வந்தபோதுதான் கவனித்தேன்.
அதனால், கீழே கொஞ்சம் வழிந்துவிட்டது’, என்று கூறினான்.
அதற்கு பணக்காரர், ‘கீழே ஓட்டை என்றால் கீழேதானே குறைந்திருக்க வேண்டும்.
எப்படி மேலே குறைந்தது’, என்றுகத்தினார்.
இந்தக் கதைக்கும் இனி எழுதப்போகின்ற விடயத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
உங்களை கொஞ்சம் சிரிக்க வைக்கவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதே அது.
இலங்கை அரசுக்கு சர்வதேச நாணய நிதியம் மூன்று பில்லியன் டொலர்களை கடனாக வழங்க முடிவெடுத்தது பற்றிய செய்தி வெளிவந்த நாளிலிருந்து
சமூக வலைத்தளங்களில் எமது வரைஞர்கள் நகைச்சுவைகளை கொட்டித்தீர்த்து வருகின்றனர்.
கடன் கிடைத்ததற்காக பட்டாசு கொளுத்தி மகிழ்கிறார்கள் என்றும் ஐம்பது பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக கடன் உள்ள நாட்டுக்கு வெறும்
மூன்று பில்லியன் டொலர்கள் மட்டுமே கடன் கிடைத்தது என்பதை பலரும் உணர்கிறார்கள் இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் இலங்கையை
வறுத்தெடுக்கிறார்கள்.
இலங்கை திவாலான நாடு.
வாங்கிய கடன்களை செலுத்த முடியாததால் திவாலானதாக அறிவித்த நாடு.
அப்போது ஆட்சியிலிருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான பொருளாதார கொள்கையாலும் ஊழல் மோசடிகளாலும் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளாலும் நாடு அப்படியொரு நிலையை அடைய வேண்டியதாயிற்று.
தனது கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு நீண்ட இழுத்தடிப்பின் பின்னர் உள்ளே வந்த ரணில் விக்கிரமசிங்க, தான் வந்த நாள்முதல் நாட்டை நெருக்கடியில் விழாமல் பாதுகாப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுங்கள் என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்த
போது, அப்போது நிதி அமைச்சராக இருந்த பஸில் ராஜபக்ஷவும் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அஜித் நிவாட் கப்ராலும் அதனை மறுத்துவந்தனர்.
ஆனால், நாடு முற்றாகத்திவாலான பின்னரே கோட்டாபய வேறு வழியின்றி ரணிலை பிரதமராக்கி, சர்வதேச நாணய நிதியத்தின் காலடியில் விழசம்மதித்தார்.
இன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மிகக் கடுமையானவை என்றாலும் அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு அவர்களின் கடனுதவியை பெற்றிருக்கிறார்.
சமூக வலை போராளிகள் சொல்வதுபோல யானைப் பசிக்கு கிடைத்திருப்பது சோளப் பொரிதான்.
அதில் பேசுவதற்கு எதுவும் இல்லை.
ஆனால், சர்வதேச நாணய நிதியம் இன்று இலங்கையை கடன் கொடுக்கக்கூடிய நாடுகளில் ஒன்றாக அறிவித்து விட்டது.
அதாவது, யார் விரும்பினாலும் இலங்கைக்கு கடன் கொடுக்கலாம்.
அதுவே, சர்வதேச நாணய நிதியத்தின் முடிவால் இலங்கைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய நன்மை.
சிறிது சிறிதாக என்றாலும் இலங்கை கடன்களை வாங்கி குவிக்கலாம்.
அதனை சரிக்கட்ட அவர்கள் விதித்திருக்கின்ற நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துகின்ற போது நட்டில் யாரும் அதனை கண்டிக்கவும் முடியாத நிலை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியம் கடனுக்கு அனுமதி கொடுத்ததும் – அதனால்தான் நாட்டுக்கு விரைவில் ஏழு பில்லியன்
டொலர்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
அதிகம் ஏன், இன்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள் சிலர் உட்பட இரண்டு இலக்க எண்ணிக்கையில் அதன்
உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்துடன் இணையவிருக்கின்றனர் என்று கொழும்பில் பரவலாக பேசப்படுகின்றது.
சவாலான நேரத்தில் தனி ஒருவராக பாராளுமன்றத்தில் இருந்துகொண்டு நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட ரணில், பின்னர் ஜனாதிபதியாகி இன்று நாட்டை மீட்டுவிட்டாரென்றே பொதுவாக மக்கள் உணர்கின்றார்கள்.
அதனால்தான் அவரது தலைமையை ஏற்க, எதிரணியிலிருந்து பலர் கட்சி தாவ தயாராகின்றனர் என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டியிருக்கின்றது.
இன்றைய நிலையில் எதிர்வரும் நவம்பரின் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles