28.5 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

கடந்த சில நாட்களாக தெற்கிலிருந்து தொடர்புகொள்கின்ற ஊடகவியலாளர்கள் பலரும் விசாரிக்கின்ற செய்தி, போதகர் போல் தினகரன் மீது குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை பற்றியதுதான்.
அவரின் வருகை தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட மறுதினமே, அவரின் ஆசீர்வாத பெருவிழா நடைபெறவிருந்த மானிப்பாய் பகுதி எங்கும் ‘யாழ்ப்பாணம் சிவபூமி. மதமாற்றிகள் நுழையாதீர்கள்’ என்று கூறும் சுவரொட்டிகள் சிவசேனை அமைப்பினால் ஒட்டப்பட்டிருந்தன.
போல் தினகரன் சுற்றுலா வீசாவில் வருகை தருவதால் அவர் அப்படியொரு பொது வைபவத்தில் உரையாற்றுவது சட்டவிரோதமானது என்று தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குடிவரவு கட்டுக்காட்டாளர் நாயகத்துக்கு சிவசேனை தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கடிதம் எழுதுகின்றார்.
கூடவே, விழா நடைபெறும் இடத்துக்கு முன்னால் சைவர்களை அணிதிரளுமாறும் போராட்டம் ஒன்றுக்கும் அழைப்பு விடுகின்றார்.
அப்படி அழைப்பு விடுத்துவிட்டு, அதனையே காரணம்காட்டி அந்த வைபவம் நடைபெற்றால் சமூகங்களிடையே அமைதியின்மை ஏற்படும் என்று யாழ். பிரதி பொலிஸ் மா அதிபரிடம் அவரே முறையிடுகின்றார்.
ஆக, எந்த எந்த வகையில் அந்த நிகழ்வைத் தடுக்க முயற்சிக்க முடியுமோ அவற்றைச் செய்கின்றார்.
அவரின் கடிதம் கிடைத்ததும், குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தனிக் குழு ஒன்றை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் அனுப்பி, விமான நிலையத்தில் தினகரன் குழுவினர் வந்து இறங்கியதும் தனித்தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, மானிப்பாய் ஆசிர்வாத பெருவிழாவில் கலந்துகொள்ள தடைவிதிக்கின்றனர்.
மறுநாள் அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த போதகர், போல் தினகரன் யாரையும் மதம் மாற்ற வரவில்லை என்றும் தெரிவித்தார்.
இவையெல்லாம் பெரும்பாலும் வாசகர்கள் அறிந்தவைதான்.
இந்த சம்பவம் நடைபெற்று அதுபற்றிய செய்திகள் வெளிவந்த பின்னர், தெற்கில் பல்வேறு தரப்பினரும் இலங்கை சிவசேனை பற்றியும் அதன் ஸ்தாபகர் மறவன்புலவு சச்சிதானந்தன் பற்றியும் அதிகம் கவனம் செலுத்தியிருப்பதை காணமுடிகின்றது.
அதனால்தான் ஊர்க்குருவியுடன் தொடர்புகொள்ளும் பலரும் அவர் பற்றிய விபரங்களைக் கேட்டு தத்தமது ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.
அதுவல்ல, இந்த ஊக்குருவியை உறுத்துகின்ற விடயம்.
கிறிஸ்தவ போதகர் மீதான சைவர்களின் எதிர்ப்பு நடவடிக்கை நாடுதழுவிய அவதானிப்பை பெற்றிருக்கும் இவ்வேளையில் – அவரின் நிகழ்வுகளுக்குத் தடைகள் ஏற்படுத்தப்படும் ஒரு பரபரப்பான நிலைமையில் – திடீரென்று வவுனியா – நெடுங்கேணி – வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் அட்டூழியம் நடைபெற்றிருக்கின்றது.
வழமை போலவே, உடனடியாக, அரசாங்கத்தின்மீது அனைத்துத் தரப்பினரதும் கண்டனங்கள் திரும்பியிருக்கின்றன.
தொல்பொருள் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த இடத்தில் இப்படியோர் அட்டூழியம் நடைபெற்றிருப்பதாலேயே அனைவரின் கைகளும் அரசாங்கத்தை
நோக்கித் திரும்பியிருக்கின்றன.
அரசாங்கத் தரப்பிலிருந்து இப்படியோர் அநியாயத்தை செய்திருக்கமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லவும் முடியாது என்பது வேறு விடயம்.
ஆனால், சம்பவம் நடைபெற்ற காலமும் நடைபெற்றிருக்கின்ற முறையும் பல சந்தேகங்களைப் பலரிடத்திலும் ஏற்படுத்தியிருக்கின்றது.
அந்த ஆலயத்தில் இருந்த விக்கிரகங்கள் பல உடைத்து வீசப்பட்டிருக்கின்றன.
அங்கிருந்த விநாயகர் சிலை, அம்மன் சிலை என்பன பெயர்த்து அகற்றப்பட்டிருக்கின்றன.
சில சிலைகள் உடைத்து வீசப்பட்டும் இருக்கின்றன.
பௌத்த ஆலயங்களில் இன்றும் விநாயகரை கணபதி தெய்யோ என்றும் அம்மனை சக்தி என்றும் வைத்து வழிபடுகின்ற பௌத்தர்கள் இவ்வாறு தாம் வழிபடுகின்ற தெய்வங்களின் சிலைகளை அவமதிப்பார்களா என்ற கேள்வியும் எழுகின்றது.
‘தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை.
இது தொடர்பில் அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிக்கின்றேன்’ என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்திருக்கிறார்.
இந்த வேளையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே நிகழ்நிலையில் உரையாற்றியபோது, தமிழர்களுடன் தான் முன்னெடுத்துவரும் நல்லிணக்க செயல்பாடுகள் பற்றியும் கூறியிருக்கின்றார்.
அதோடு, ஜனாதிபதி தேர்தலோ பாராளுமன்றத் தேர்தலோ வருமிடத்து, தமிழ் மக்களின் ஆதரவை முழுமையாக எதிர்பார்த்து நிற்கின்றனர் ஜனாதிபதியும் அரசாங்கமும்.
இந்த நிலையில், அரச தரப்பினரின் அனுசரணையுடன் இதுபோன்ற அனர்த்தம் நடந்திருக்கும் என்றும் நம்புவதற்கு கடினமாக இருப்பதாக தமிழர்களில் பலரே கருதுகின்றனர்.
வெடுக்குநாறி மலை சம்பவம் தொடர்பில் அரசாங்க மற்றும் படைத் தரப்பின் அதியுயர் மட்டங்களில் புதிரோடு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதும் ஊர்க்குருவிக்கு தனிப்படத் தெரியவந்தது.
என்னவாயினும், அது அரச தரப்பினரால் நடத்தப்பட்டதல்ல என்றால், உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டிய முக்கிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.
அரசாங்கம் உண்மையான நல்லிணக்கத்தை விரும்பினால், உண்மையைக் கண்டறியவேண்டும்.
அதேவேளை, தாமே அந்த இடத்தில் சிவலிங்கத்தையும் ஏனைய தெய்வங்களின் சிலைகளையும் மீண்டும் பிரதிஷ்டை செய்யவேண்டும்.
இந்த பத்தியை எழுதி முடித்த பின்னர், சச்திதானந்தன் அவர்களிடமிருந்து கிடைத்த தகவல் ஒன்று, நெடுக்கு நாறியில் இருந்தவற்றை இருந்தவாறே அமைக்க ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணித்திருக்கிறார் என்று தெரிவித்தது.

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles