31 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உலகக் கிண்ண கிரிக்கெட்டுக்கு நேரடி தகுதிபெறுவதே இலங்கையின் இலக்கு – தசுன் ஷானக்க

டெஸ்ட் விளையாடும் நாடு என்ற ரீதியில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெறுவதே  இலங்கையின்  இலக்கு என அணித் தலைவர் தசுன் ஷானக்க குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் சனிக்கிழமை (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் ஓக்லண்ட், ஈடன் பார்க் அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தசுன் ஷானக்க இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவில் இந்த வருடம் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட நேரடி தகுதிபெறுவதற்கு நியூஸிலாந்துடனான ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடரில் இலஙகை 3 – 0 என முழுமையாக வெற்றிபெறவேண்டும்.

உலகக் கிண்ண கிரிக்கெட்டுக்கு நேரடி தகுதிபெற இத் தொடரில் இலங்கை முழுமையாக வெற்றிபெறவேண்டும். அது இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்குமா என கேட்க்கப்பட்டபோது,

‘எமக்கு அழுத்தும் எதுவுமே இல்லை. டெஸ்ட் விளையாடும் நாடு என்ற ரீதியில் உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடி தகுதிபெறுவதே எமது இலக்கு. அந்த இலக்கை அடைவது சாத்தியம் என்றுதான் நான் எண்ணுகிறேன். ஆனால், எல்லாம் அந்தந்த நாளில் வெளிப்படுத்தப்படும் ஆற்றல்களில்  தங்கியிருக்கிறது’ என அவர் கூறினார்.

‘இந்தத் தொடரை எதிர்கொள்வதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். அதற்காக நாங்கள் எங்களை நன்கு தயார்படுத்திக்கொண்டுள்ளோம். சிரேஷ்ட வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் அணிக்கு திரும்பி இருப்பது இளம் வீரர்களுக்கு பெரும உற்சாகத்தைக் கொடுப்பதாக அமைகிறது’ என்றார்.

திறமையான வீரர்கள் சிலர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ளதால் நியூஸிலாந்து அணியை இலகுவாக கருதுகிறீர்களா? என வினவப்பட்டபோது

‘நியூஸிலாந்து திறமை மிக்க அணியாகும். அவ்வணியை நாங்கள் இலகுவாக  எடுத்துக்கொள்ளமாட்டோம். தொடரை வெல்வதற்காக நாங்கள் கடுமையாக போட்டியிடவேண்டிவரும்’ என தசுன் ஷானக்க பதிலளித்தார்.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக தோல்வி அடைந்தபோதிலும் இலங்கை கடுமையாக போட்டியிட்ட விதமானது இலங்கைக்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற உதவும் என கருதப்படுகிறது.

முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன், தற்போதைய அணித் தலைவர் டிம் சௌதீ, டெவன் கொன்வே ஆகிய மூவரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் அணியில் இடம்பெறாதது இலங்கைக்கு ஆறுதல் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. டிம் சௌதீக்கு பதிலாக நியூஸிலாந்து அணித் தலைவராக டொம் லெதம் விளையாடவுள்ளார்.

இந்த வருட முற்பகுதியில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆரம்ப வீரராக அறிமுகமாகி அரைச் சதம் குவித்த நுவனிது பெர்னாண்டோ, முதலாவது போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்கவுடன் ஆரம்ப ஜோடியாக சேரவுள்ளார்.

அவர்களைத் தொடர்ந்து துடுப்பாட்ட வரிசையில் குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க, சுழல்பந்துவீச்சு சகலதுறைவீரர் வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் சாமிக்க கருணாரட்ன அணியில் இடம்பெற்றால் துடுப்பாட்டம் மேலும் பலம் அடையும். அவர் விளையாடினால் லஹிரு குமார அல்லது கசுன் ராஜித்த ஆகிய இருவரில் ஒருவர் ஒதுங்க நேரிடும்.

சுழல்பந்துவீச்சாளராக பெரும்பாலும் மஹீஷ் தீக்ஷன இடம்பெறுவார். ஒருவேளை இன்னும் ஒரு வேகப்பந்துவீச்சாளரை அணியில் இணைக்க முகாமைத்துவம் தீர்மானித்தால் தீக்ஷன வெறும் பார்வையாளராக இருக்க நேரிடும்.

நியூஸிலாந்து அணியில் சாத் போவ்ஸ்,  ரச்சின் ரவிந்த்ர ஆகியோர் அறிமுக வீரர்களாக விளையாடுவர் என அறிவிக்கப்படுகிறது.

நியூஸிலாந்து அணி: பின் அலன், சாத் போவ்ஸ், வில் யங், டெரில் மிச்செல், டொம் லெதம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ர, ப்ளயார் டிக்னர் அல்லது பென் லிஸ்டர், ஹென்றி ஷிப்லி அல்லது லொக்கி பேர்கசன், மெட் ஹென்றி, இஷ் சோதி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles