31 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எது சதி?

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியல் தீர்வை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கான சதி முயற்சியில் கூட்டமைப்பு ஈடுபடுவதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவ்வாறான குற்றச்சாட்டுகளை அவர் அவ்வப்போது முன்வைப்பது ஆச்சரியமான விடயமல்ல.
அரசியலில் ஏதாவது முன்னெடுப்புகள் நடப்பதற்கான அசைவுகள் தெரியத் தொடங்கியதுமே உடனடியாகவே கஜேந்திரகுமார் தனது குற்றம்சாட்டும்
பிரசாரங்களை ஆரம்பித்து விடுவதுண்டு.
ஆறு தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து, 13ஆவது திருத்தச் சட்டத்துக்குள் முடக்குவதற்கான சதி ஒன்று இடம்பெறுவதான பிரசாரம் ஒன்றை ஆரம்பித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் 13ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறி ஊர்தி பவனிகளையும் நடத்தியிருந்தார்.
ஆனால், கஜேந்திரகுமார் கூறியது போன்று எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை.
இப்போதும் அதேமாதிரியான பிரசாரம் ஒன்றையே ஆரம்பித்திருக்கின்றார்.
ரணில் விக்கிரமசிங்க தேசிய இனப்பிரச்னை தொடர்பில் ஆராயும் நோக்கில் அனைத்து கட்சிகளையும் அழைக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் சம்பந்தன் இலத்தில் கூடி ஆராய்ந்திருந்தன.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் கஜேத்திரகுமார் பொன்னம்பலம் சதியொன்று நடப்பதாகக் கூறுகின்றார்.
உண்மையில் எதுவுமே நடக்கவில்லை.
கஜேந்திரகுமாரின் அரசியல் அணுகுமுறையானது ஆரம்பகால தமிழ் அரசுக் கட்சியின் அணுகுமுறைக்கு ஒப்பானது.
கஜேந்திரகுமாரின் பாட்டனார் தவறான பாதையில் பயணிக்கின்றார் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக செயல்படுகின்றார் என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறி தமிழ் அரசு கட்சியை ஆரம்பித்தார்.
தமிழ் அரசு கட்சியின் அங்குரார்ப்பண கூட்டம் கொழும்பு மருதானையில் இடம்பெற்றது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை கைவிட்டு சராணாகதி அடைந்துவிட்டதாக செல்வநாயகம் குற்றம்சாட்டுகின்றார்.
இதனால், காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுவிட்டாகவும் கூறுகின்றார்.
இன்று அதே அரசியலை, ஜி. ஜி. பொன்னம்பலத்தின் பேரன் முன்னெடுக்க முயற்சிக்கின்றார்.
தமிழ் அரசுக் கட்சி உருவாக்கப்பட்டு 73 வருடங்கள் கடந்துவிட்டன.
இன்றுள்ள நிலைமையை கருத்தில் கொள்ளாமல் 73 வருடங்களுக்கு முன்னர் செல்வநாயகம் முன்னெடுத்த அரசியலுக்கு பழி தீர்க்கும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழ் அரசு கட்சி அடங்கலாக) சதிசெய்வதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகின்றார்.
1949இற்கு பின்னரான அரசியல் சூழலில் தமிழ் அரசு கட்சி சமஷ்டி கோரிக்கையை முன்வைத்த போதிலும் அதனை அடைவதில் படுதோல்வியடைந்தது.
தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் (இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம் உள்ளடக்கம்) பின்னர் மாவட்ட
சபைக்கு கீழிறங்கினர்.
ஏனெனில், சமஷ்டியை அடைவதை மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்தால் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களை பாதுகாக்க முடியாமல்
போய்விடும்.
எனவே, ஆகக் குறைந்தளவிலாவது அதிகாரங்களை கைப்பற்றி இருப்பதைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமென்னும் நோக்கில்தான் அன்றிருந்த தமிழர் கூட்டணி இவ்வாறான நகர்வுகளை மேற்கொண்டிருந்தது.
எவருமே தமிழ் இனத்துக்கு அநீதி இழைக்க வேண்டுமென்னும் நோக்கில் எதனையும் திட்டமிட்டு முன்னெடுக்கவில்லை.
அன்றிருந்த சூழலில் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை.
மேலும், மிதவாதிகள் எவருமே காந்திய வகையிலான சாத்வீகப் போராட்டத்தை உச்சளவில் முன்னெடுப்பதற்கும் தயாராக இருக்கவில்லை.
இன்றும் அவ்வாறானதோர் இக்கட்டான நிலைமையே இருக்கின்றது.
சமஷ்டி தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதால் மட்டுமே விடயங்களை கையாளமுடியாது.
அதற்கு மாறாக, தந்திரோபாயமாகவும் விடயங்களைக் கையாளவேண்டும்.
அவ்வாறான தந்திரேபாய அணுகுமுறைகளை வெறுமனே சதி என்னும் சொல்லால் நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள மாற்றுவழியை முன்வைத்து அந்த மாற்றுவழியின் மீதான தங்களின் அர்ப்பணிப்பை நிரூபிக்க வேண்டும்.
அவ்வாறில்லாது, முன்னெடுக்கப்படும் ஒவ்வொன்றின்மீதும் சேற்றை வீசுவதால் தமிழ் மக்களின் வாழ்வில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு இங்கு தொடர்ந்தும் வாழலாமென்னும் நம்பிக்கையை கட்சிகள் வழங்கவேண்டும்.
அவ்வாறில்லாது, வெறுமனே சமஷ்டி பற்றி உச்சரித்துக் கொண்டிருப்பதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை.
இந்தப் பின்னணியில் யார் உண்மையிலேயே மக்களுக்கு சதிசெய்கின்றனர்? அரசியல் யதார்த்தங்களை புறந்தள்ளி செயல்படுவர்கள்தான்
உண்மையிலேயே மக்களுக்கு எதிரானவர்களாவர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles