25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சம்பந்தனின் கோரிக்கை?

சம்பந்தன் இதுவரையில் பலவாறான கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றார்.
அவைகள் அனைத்துமே தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பானவை.
ஆனால், முதன்முதலாக தான் சார்ந்த தமிழரசு கட்சிக்குள் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அறிக்கை தருமாறு கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்.
அதாவது, உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவின்போது, திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன
எனவும் அதனை ஆராய்வதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்றும் தமிழரசு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை சம்பந்தனின் மாவட்டமாகும்.
இந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியின் முக்கியஸ்தர்களும் குறித்த கூட்டத்தில் பங்குகொண்டிருந்தனர்.
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கட்சிக்குள் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோருகின்றார் என்றால் – அதனை ஆராய்வதற்கு குழுக்கள் நியமிக்கப்படுகின்றன என்றால் – தமிழரசு கட்சியின் பலவீனமான நிலைமையை இனியும் மறைக்க முடியாது.
நிலைமை மோசமடைந்து செல்கின்றது.
தமிழரசு கட்சி மோசமான உட்சிக்கல்களுக்குள் சிக்குப்பட்டிருக்கின்றது.
சம்பந்தனின் கோரிக்கை இதனை அம்பலப்படுத்தியிருக்கின்றது.
2020இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் இருந்தே தமிழரசு கட்சியின் உள் முரண்பாடுகள் அம்பலமாகின.
தேர்தலின்போது சுமந்திரன் அணி, மாவை அணியென இரண்டு அணிகள் மோதிக்கொண்டன.
சுமந்திரனின் தோல்வியை வெளியிலுள்ளவர்களை விடவும் தமிழரசு கட்சியின் ஒரு குறித்த அணியே அதிகம் விரும்பியது.
இறுதியில் மாவை சேனாதிராசா தோல்விடைந்தார்.
தேர்தல் பிரசாரங்களின்போதும் தேர்தல் முடிவடைந்த பின்னரும் இந்த விடயங்கள் பொது வெளிகளில் விவாதிக்கப்பட்டன.
இப்போதும் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரான சட்டத்தரணி தவராசா, சுமந்திரனின் செயல்பாடுகளை அவ்வப்போது விமர்சித்துவருகின்றார்.
அதனைத் தடுப்பதற்கு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவால் முடியவில்லை.
இவ்வாறானதொரு நிலையில், சம்பந்தனே திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் வேட்பாளர் தெரிவின்போது மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன என்று கூறியிருப்பதானது, கட்சிக்குள் சம்பந்தன் அணி- சம்பந்தனுக்கு எதிரான அணியென்று ஒரு புதிய குழப்பம் ஏற்பட்டிருப்பதை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது.
அவ்வாறில்லையென்று கட்சியினர் வாதிடலாம்.
ஆனால், பின்னர் எதற்காக சம்பந்தன் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைக்க வேண்டும்? எதற்காக பிரச்னையை ஆராய்வதற்காக குழுக்கள்
நியமிக்கப்பட வேண்டும்? சம்பந்தனின் இயங்க முடியாத நிலையிருப்பதால் அவரின் சொந்த மாவட்டத்தின் கட்சி பணிகளில்கூட அவரால் தலையீடு செய்ய முடியவில்லை.
சம்பந்தன் இயங்கிய வேளையில், திருகோணமலையில் அனைத்துமே அவரின் தீர்மானத்துக்கு அமைவாகவே நடந்தது.
அவரின்றி அணுவும் அசையாதென்பது போலவே விடயங்கள் இடம்பெற்றன.
யாரை வேட்பாளராக நிமியக்க வேண்டும், நிமிக்கக்கூடாது, பங்காளிக் கட்சிகளுக்கு ஆசனம் வழங்குவதா அல்லது இல்லையா – அனைத்தும் அவராலேயே தீர்மானிக்கப்பட்டன.
திருகோணமலை மட்டுமல்ல, திருகோணமலையில் கதிரையில் இருந்தவாறு தமிழரசு கட்சியின் அனைத்துத் தீர்மானங்களையும் அவரே முன்னெடுத்து வந்தார்.
திருகோணமலையில் 25 வருடங்களுக்கு மேல் வாழாத ஒருவரை திருகோணமலை தமிழரசு கட்சியின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தினார்.
சம்பந்தனின் தீர்மானங்களை கட்சியிலுள்ள எவருமே கேள்விக்குள்ளாக்க முற்படவில்லை.
சி. வி. விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காக கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசாவை செல்லாக்காசாக்கி – ஓரங்கட்டி – தான் விரும்பிய விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கினார்.
இவ்வாறு தான் விரும்பிய அனைத்தையுமே முன்னெடுத்து வந்த சம்பந்தனால் தற்போது கட்சிக்குள் தான் விரும்பும் சிறிய விடயத்தைக்கூட, முன்னெடுக்க
முடியவில்லை.
இவ்வாறானதொரு சூழலில்தான் தனது தீர்மானத்துக்கு மாறாக மோசடிகள் இடம்பெறுகின்ற என்று குற்றம்சாட்டியிருக்கின்றார்.
இதில் சம்பந்தன் சரியாக அல்லது கட்சியின் சார்பில் குறித்த மாவட்டங்களில் தீர்மானங்களை மேற்கொண்டவர்கள் சரியானவர்களா? இதுவல்ல இங்குள்ள
பிரச்னை.
தமிழரசு கட்சி அதன் இறங்குமுகத்தை எதிர்கொண்டிருக்கின்றதா என்பதுதான் கேள்வி? ஏனெனில், அண்மைக்காலமாக தமிழரசு கட்சி குழப்பங்களின் கட்சியாகவே வெளித்தெரிகின்றது.
இதனை வெறுமனே தமிழரசு கட்சியின் பிரச்னையாக மட்டும் நோக்கக் கூடாது – மாறாக, தமிழர்களின் பேரம் பேசும் ஆற்றலை தக்கவைக்க வேண்டிய ஜனநாயக அரசியல் தொடர்ந்தும் எவ்வாறு பலவீனமடைந்து செல்கின்றது – என்பதே நாம் கருத்தில்கொள்ள வேண்டிய விடயமாகும்.
இது தற்செயலாக நடைபெறுகின்றதா அல்லது நன்கு திட்டமிட்டு தமிழர் அரசியல் சிதைக்கப்படுகின்றதா? இந்தச் சிதைவுக்கு ஒருவரை முதன்மையாக குற்றம்சாட்ட முடியுமென்றால் – அந்த முதல் குற்றவாளி சம்பந்தன்தான்.
ஏனெனில், சம்பந்தன் தனது அதிகார நலன்களைவிட வேறு ஒன்றையுமே கருத்தில்கொள்ளவில்லை.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles