32 C
Colombo
Thursday, April 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜெனிவா அரசியல் குற்றம்சாட்டுக்களால் பயனுண்டா?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலின் போது, அங்கு பேசியிருக்கும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் தங்களின் அதிருப்திகளை வெளியிட்டிருக்கின்றனர்.

இந்தியாவின் நிலைப்பாடு என்ன ? – என்னும் கேள்வியிருந்த நிலையில், தற்போது இந்தியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கின்றது. அதாவது, தமிழ் மக்களின் நீதி, சமத்துவம் கௌரவம், சமாதானம் ஆகியவற்றின் மீது, இந்தியா அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு மூலம், தமிழ் மக்களின் உரிமைகளை மதிப்பது, இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் உகந்தது என்னும் நிலைப்பாட்டை தெரிவிக்க விரும்புவதாகவும் ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தெரிவித்திருக்கின்றார். அதே வேளை இவ்வாறான அபிலாஸைகளை நிறைவேற்றுவதற்கு, நல்லிணக்கம் மற்றும் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது அவசியமென்றும் இந்தியா வலியுறுத்தியிருக்கின்றது. புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவருவதன் ஊடாக, 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்த வேண்டுமென்னும் குரல்கள் தெற்கில் மேலோங்கியிருக்கின்ற சூழலில், மீண்டும் இந்தியா 13வது திருத்தச்சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் தொடர்பில் வலியுறுத்தியிருப்பது முக்கியமானது.

ஆனால் தமிழ்ச் சூழலில் ஒரு சோர்வு காணப்படுகின்றது. இதற்கு காரணம், ஏற்கனவே வெளிவந்திருக்கும் பூச்சிய வரைபு. கடந்த வாரம் பூச்சிய வரைபொன்றை இணைத்தலைமை நாடுகள் வெளியிட்டிருந்தன. அதனடிப்படையிலேயே இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரவுள்ளது. அந்த வரைபில் சில விடயங்கள் இணைத்துக்கொள்ளப்படுமா அல்லது அது மேலும் பலவீனப்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் நோக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு பலவீனப்படுத்தப்பட்டால் கூட, அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

பூச்சிய வரைபு தமிழ் கட்சிகளினதும் புலம்பெயர் அமைப்புக்களினதும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாகவே இருக்கின்றது. களத்திலிருந்து, பிரதான மூன்று தமிழ் கட்சிகளும் கூட்டாக ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தன. அதே போன்று, புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தன. அதே வேளை தனியாகவும் சில அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டிருந்தன. இவை அனைத்திலும் சில விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன. அதாவது, இலங்கையின் பொறுப்பு கூறல் விடயம் எதிர்பார்த்தளவிற்கு முன்னோக்கி பயணிக்கவில்லை. எனவே இனியும் இலங்கையின் பொறுப்புக் கூறலை மனித உரிமைகள் பேரவைக்குள் விவாதிப்பதில் பயனில்லை. இலங்கை விவகாரத்தை பேரவைக்கு வெளியில் கொண்டுசெல்ல வேண்டும் – என்பதே தமிழர் தரப்பின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இந்த அடிப்படையிலேயே இலங்கை விவகாரத்தை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டுமென்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதே வேளை, சிரிய விவகாரத்தில் பின்பற்றப்பட்ட ரிபிள் ஐ.எம் பொறிமுறையை இலங்கை விவகாரத்திலும் கைக்கொள்ள வேண்டுமென்னும் கோரிக்கையும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்டிருந்தது. ஒரு பாதிக்கப்பட்ட தரப்பு தங்களின் நிலைப்பாடுகளை முன்வைப்பதில் தவறில்லை. ஆனால் அதனை நாடுகள் தங்களின் தராசில் நிறுத்துப்பார்த்துத்தான் கையிலெடுக்கும். நிறுத்துப்பார்க்கும் போது அதன் நிறையை தங்களால் சுமப்பது கடினமென்று கருதினால், அதனை கைவிட்டுவிடும். இதனை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

பூச்சிய வரைபை கண்டதும் தமிழர் தரப்பில் பலரும் உணர்சிவசப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு பலரும் உணர்ச்சிவசப்படுவதற்கு ஒரு தெளிவான காரணமுண்டு. அதாவது, ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையின் உள்ளடக்கம் சற்று காட்டமாக இருந்தது. தமிழர் தரப்புக்களின் எதிர்பார்ப்புக்ளை பூர்திசெய்வதாக இருந்தது. இதனால் சிலர் அதற்கு அவசரப்பட்டு உரிமை கோரவும் முற்பட்டனர். தாங்கள் கூறிய விடயங்கள் ஆணையாளரின் அறிக்கையிலும் வெளிவந்திருப்பதாகவும் சிலர் கூறிக்கொள்வதை காணமுடிந்தது. ஆனால் இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் பூச்சிய வரைபிற்கும் ஆணையாளரின் அறிக்கைக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமுண்டு. ஆணையாரின் அறிக்கையால் புளகாங்கிதமடைந்திருந்தவர்களுக்கு, பூச்சிய வரைபு ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது. உண்மையில் இதில் புளகாங்கிதமடைவதற்கும் ஏமாற்றமடைவதற்கும் எதுவுமில்லை. ஆணையாளர் எவ்வாறான பரிந்துரைகளையும் முன்வைக்கலாம் ஆனால், அவற்றை உறுப்புநாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உறுப்புநாடுகளை பொறுத்தவரையில் மனித உரிமை என்பது இரண்டாவது விடயம். மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்குத்தான் மனித உரிமைகள் முதலாவது விடயம். ஆணையாளரின் அறிக்கையை, ஒவ்வொரு நாடும் தனது சொந்த நலன்களிலிருந்துதான் உற்றுநோக்கும். ஆணையாளரின் அறிக்கையில் எதனை ஆதரிக்கலாம் – எதனை ஆதிரிக்கக் கூடாதென்னும் முடிவுகளை மேற்கொள்ளும்.

இந்த இடத்திலிருந்துதான் இணைத்தலைமை நாடுகளின் பூச்சிய வரைபை நோக்க வேண்டும். இணைத்தலைமை நாடுகள் ஒரு வரைபை முன்வைத்தால் அதில் வெற்றிபெற வேண்டும். வெற்றிபெற வேண்டுமாயின் பேரவையின் பெரும்பாண்மையான உறுப்பு நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருக்கும் 47 உறுப்பு நாடுகளும் தாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் பிராந்தியம், அதில் தங்களுக்குள்ள கடப்பாடுகள், தங்களின் அரசியல் கொள்கை நிலைப்பாடுகள் – இவற்றிலிருந்தான் முடிவுகளை மேற்கொள்ளும். இவற்றை கருத்தில் கொண்டுதான், இணைத்தலைமை நாடுகள் செயற்பட முடியும். இவற்றை கருத்தில்கொள்ளாது விட்டால், இணைத்தலைமை நாடுகள் முன்வைக்கும் பிரேரணை தோல்வியடைந்துவிடும். பாதிக்கப்பட்டவர்கள் என்னுமடிப்படையில், தமிழர் தரப்பின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும், இந்த விடயங்கள் எவையுமே நியாயத் தராசில் நிறுத்துப்பார்ப்பதில்லை. ஒவ்வொரு நாடுகளினதும் சொந்த நலன்களுக்கான தராசுகளில்தான் நிறுத்துப் பார்க்கப்படும். இதனை துல்லியமாக மதப்பிடாமல் அல்லது மதிப்பிடத் தெரியாமல், இணைத்தலைமை நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டுமென்றவாறு ஆவேசப்படுவதால் எந்தவொரு பயனுமில்லை. இவ்வாறு ஆவேசப்படுவது தமிழர் தரப்பிலுள்ள சர்வதேச அரசியல் தொடர்பான வறுமையே இனம்காட்டும்.

2012இல் இலங்கை மீது முதலாவது பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, பேரவையில் அமெரிக்கா உறுப்பு நாடாக இருந்தது. அமெரிக்கா இல்லாதிருந்திருந்தால் அப்படியொரு பிரேரணையை வெற்றிகொண்டிருக்க முடியாது. இப்போதும் அமெரிக்காவின் ஆதரவு நிச்சயம் இணைத்தலைமை நாடுகளுக்கு தேவை. ஏனெனில் இணைத்தலைமை நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளால் ஒரு எல்லைக்கு மேல் பல்வேறு நாடுகளை வளைக்க முடியாது. அமெரிக்காவின் புதிய ராஜாங்கச் செயலர் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் உரையாற்றும் போது, இலங்கையின் பொறுப்பு கூறல் விடயத்தில் அமெரிக்கா அக்கறை செலுத்துமென்று தெரிவித்திருக்கின்றார். அமெரிக்கா இந்த விடயத்தில் மீளவும் தலையீடு செய்யுமென்னும் செய்தி தெளிவாக வெளிவந்திருக்கின்றது. அமெரிக்கா அதன் உலகளாவிய கரிசனைகள் என்னுமடிப்படையில்தான் இலங்கை விவகாரத்திலும் தலையீடு செய்யும். பைடன் நிர்வாகம் மீளவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு திட்டமிட்டிருக்கின்றது. அமெரிக்கா நிச்சயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஆதிரிக்காது. ஏனெனில் அமெரிக்கா அதனை அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமெரிக்காவின் மீதே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. தமிழர் தரப்பிற்கு அமெரிக்காவின் ஆதரவு தேவையெனின் அமெரிக்க நிகழ்சிநிரலை முதலில் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். உலகமே யாழ்ப்பாணத்தை திரும்பிப்பார்த்துக் கொண்டிருப்பதான கற்பனைகளை விடுத்து, யதார்த்தத்தை புரிந்துகொள்ளவும், அந்த யதார்த்தத்திற்குள்ளால் பயணிப்பதற்கும் முயற்சிக்க வேண்டும். அவ்வாறில்லாது கற்பனைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தால் மற்றவர்களை நோக்கி குற்றச்சாட்டுக்களை மட்டுமே தமிழர்கள் முன்வைத்துக் கொண்டிருக்க நேரிடும். அதனால் எந்தவொரு பயனுமில்லை. ஏனெனில் சர்வதேச சமூகத்தை, பலம்பொருந்திய நாடுகளை குற்றம்சாட்டிக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு எந்த நஸ்டமும் இல்லை. தமிழருக்குத்தான் நஸ்டம். தமிழர்கள் மீதிருக்கும் கொஞ்சமளவு கரிசனையையும் தமிழர்கள் இழக்க நேரிடும்.

இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் எந்தவொரு பிரேரணைiயும் ஏற்றுக்கொள்ளும் நிலையிலில்லை. இலங்கையை முற்றிலுமாக மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலிலிருந்து முற்றிலுமாக வெளியில் எடுக்க வேண்டுமென்றே ராஜபக்சக்களின் அரசாங்கம் முயற்சிக்கின்றது. நாடுகளை இலக்கு வைக்கும் பிரேரணைகளை எதிர்க்கும் நாடுகளும் அரசாங்கத்தையே ஆதரிக்கின்றன. அதே போன்று அமெரிக்க எதிர்ப்பை தங்களின் அரசியலாக கொண்டிருக்கும் நாடுகள், சீன சார்பு நாடுகள் என பலரும் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, பேரவையிலுள்ள நாடுகள் தங்களுக்குள் பிளவடைந்திருக்கின்றன. உண்மையில் அவர்கள் மனித உரிமையை முதலாவது விடயமாக் கொண்டிருந்தால் அவர்கள் பிளவடைய மாட்டார்கள் ஆனால் மனித உரிமைகள் விவகாரம் என்பது அவர்களை பொறுத்தவரையில் இரண்டாவது விடயமே! இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், முஸ்லிம் நாடுகளின் ஆதரவை கவரும் நோக்கில் திடிரென்று அரசாங்கம் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்திருக்கின்றது. இவ்வாறான தீடீர் நகர்வுகளால் நாடுகளை கவரமுடியுமா என்பது வேறு விடயம். ஆனால் தனது நேசசக்திகளை அணிதிரட்டி, இணைத்தலைமை நாடுகளின் முயற்சியை தோற்கடிக்கவே முயற்சிக்கும். இவ்வாறானதொரு பின்புலத்தில் இணைத்தலைமை நாடுகளின் பிரேரணை வெற்றிபெற வேண்டுமாயின், அதனை பெரும்பாலான உறுப்பு நாடுகளை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். அதற்கு பிரேரணையில் பல்வேறு விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும். அந்த விட்டுக்கொடுப்புக்கள் தமிழர்களுக்கு மகிழ்சியை கொடுக்காமல் இருக்கலாம் ஆனால் உலகத்தின் பார்வை தங்களின் மீது, தொடர்ந்தும் விழுந்துகொண்டிருக்க வேண்டுமென்று தமிழர்கள் விரும்பினால் உலகத்தோடு ஒத்தோட முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசாங்கம் விரும்புவது போன்று மனித உரிமைகள் பேரவையில் இந்த விடயத்தை விவாதிக்க வேண்டாமென்று கூறிவிட்டு, தமிழர்கள் தங்களின் வழியில் செல்ல வேண்டும். ஆனால் தமிழர்களுக்கென்று வேறு வழிகள் ஏதாவது, இருக்கின்றதா என்னும் கேள்விக்கு முதலில் பதிலை கண்டடைய வேண்டும்.

யதீந்திரா

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles