26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தமிழ்த் தேசிய கட்சிகள் சந்திக்க வேண்டிய புள்ளி?

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தவர்களில் முக்கியமானவர் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
ஏம். ஏ. சுமந்திரன்.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதா அல்லது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதா என்னும் இரு அணியினர் உருவாகினர்.
பொதுவாக சுமந்திரன் முன்வைப்பதே இறுதித் தீர்மானமென்னும் நிலையில் திடீரென்று உடைவு ஏற்பட்டிருந்தது.
ரணில் விக்கிரமசிங்கவை பொதுவெளிகளில் சுமந்திரன் கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார்.
அவரின் நியமனம் ஜனநாயக முறைமைக்கு உட்பட்ட ஒன்றல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தற்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து நீண்டகால பிரச்னைகளை தீர்ப்பதற்கு தாம் தயராகவுள்ளதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
சில தினங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க வவுனியாவுக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது உரையாற்றும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் விரைவில் சந்திக்கவுள்ள செய்தி வெளியாகியிருக்கின்றது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவும் கூடவுள்ளது (அப்படியொன்று இதுவரையில் பெயரளவில்தான் இயங்கி வருகின்றது) இந்த சந்திப்பின்போது, அரசியல் தீர்வு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் பேசுவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
சமஷ்டி அடிப்படையில் பேச வேண்டுமென்று ஏற்கனவே சிலர் பேசியிருக்கின்றனர்.
கூட்டமைப்புக்கு எதிரான கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரணில் விக்கிரமசிங்க சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பில் சிங்கள மக்களுடன் பேசவேண்டுமென்று குறிப்பிடுகின்றார்.
அவ்வாறானதொரு விடயத்தை ரணில் விக்கிரசிங்கவால் ஒருபோதும் கூறமுடியாதென்பது வேறு விடயம்.
தவிர, ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் சமஷ்டி என்னும் சொல்லுடன் அரசியல் யாப்பை கொண்டுவர முடியாதென்னும் விவாதங்களே இடம்பெற்றிருந்தன.
உள்ளடக்கத்தில் சமஷ்டி இருந்தால் போதுமானதென்னும் விவாதத்தையே சுமந்திரன் முன்னெடுத்திருந்தார்.
இதனை கஜேந்திரகுமார் அணி எதிர்த்து பிரசாரங்களை முன்னெடுத்திருந்தது.
இறுதியில் அனைத்தும் விழலுக்கிறைத்த நீரானது.
தமிழ்த் தேசிய கட்சிகளின் அரசியல் தலைவர்கள் இந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
குறுகியகால – நீண்டகால அடிப்படையிலான அரசியல் வேலைத்திட்டமொன்று தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
சமஷ்டி என்னும் ஒரு சொல் கொண்டு மட்டும் விடயங்களை நோக்குவது சரியானதோர் அணுகுமுறையல்ல.
இந்த அணுகுமுறை ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் படுதோல்வியடைந்திருக்கின்றது.
இதேவேளை, இந்தியாவின் ஆதரவின்றி பிரச்னைகளை தீர்த்துவிட முடியுமென்னும் அணுகுமுறையையே சம்பந்தன் – சுமந்திரன் கூட்டணி முன்னெடுத்திருந்தது.
அது படுதோல்வியில் முடிந்தது.
இந்த அனுபவங்களிலிருந்து சிந்திப்பதாயின், மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறும் அதேவேளை 13ஆவது திருத்தச் சட்டத்தை காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் முழுமையாக அமுல்படுத்துமாறும் கோரவேண்டும்.
அண்மையில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவால் கொண்டுவரப்பட்ட ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்னும் அடிப்படையிலான தீர்வை கொண்டுவருமாறு கோரியிருந்தார்.
அதனை ஓர் இரண்டாம்கட்ட நிலைப்பாடாக வைத்திருக்க முடியும்.
இங்குள்ள அடிப்படையான பிரச்னை ஏன் முன்னைய முயற்சிகள் தோல்வியடைந்ததென்னும் பாடத்திலிருந்தே நிகழ்காலத்தை அணுகவேண்டும்.
13ஆவது திருத்தச்சட்டமே தமிழர்களுக்கு அதிகமென்னும் மனோ நிலையிலிருக்கும் தென்னிலங்கை சிங்கள தரப்புகள் எவ்வாறு அதற்கப்பாலான ஓர் அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்ளும்? வெறுமனே அரசியல் தீர்வென்னும் பெயரில் காலத்தை இழுத்தடிக்கும் தென்னிலங்கையின் அரசியல் மாயவலைக்குள் சிக்குப்படுவதா அல்லது அதற்குள் செல்லாமல் – இருப்பதைக் கொண்டு அவர்களை அம்பலப்படுத்துவதா என்பது பற்றியே தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் வெறுமனே தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்களிலிருந்து விடயங்களை நோக்காமல் தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி சிந்தியுங்கள்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles