30 C
Colombo
Thursday, April 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்!

நியுசிலாந்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்மணியான வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகின்றார். நியூசிலாந்து வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட முதலாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.

இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

இவரை வேட்பாளராகக் களமிறக்குவதற்கான அங்கீகாரத்தை தொழிற்கட்சி வழங்கியிருந்தது.

ஆக்லான்டில் போட்டியிட்ட இவர், தேர்தலில் வெற்றிபெற்றிருப்பதால் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கோவிட் 19 க்கு மத்தியிலும் தன்னுடைய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை அவர் தீவிரமாக முன்னெத்திருந்தார். இலங்கை அரசாங்கத்துடனும் உலகம் முழுவதிலும் பரந்து வாழும் தமிழ்ச் சமூகத்துடனும் உறகளைப் பலப்படுத்திக்கொள்வதற்குத் தான் விரும்புவதாக தன்னுடைய தேர்தல் பரப்புரைகளின் போது அவர் கூறிவந்தார்.

14,142 வாக்குகளை இவர் பெற்று தனது வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டார்.

வனுஷி இராஜநாயகம் நியூசிலாந்து அரசாங்கத்திலும், சர்வதேச ரீதியாகவும் பல்வேறு பொறுப்புவாய்ந்த உயர் பதவிகளை வகித்ததன் மூலம் பரந்த நிபுணத்துவ அறிவையும், அனுபவத்தையும் கொண்டவர். சட்டத்துறையிலும், இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் பலவற்றிலும் முக்கியமான பதவிகளையும் வகித்திருக்கின்றார்.

தற்போது நியூசிலாந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒரு சிரேஷ்ட முகாமையாளராகவும் பதவிவகிக்கும் அவர், சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பூர்வீகமாகக் கொண்டது இவரது குடும்பம். வனுஷியின் தந்தை வழிவந்த பாட்டி லூசியா சரவணமுத்து இலங்கையின் அரசுப் பேரவையின் உறுப்பினராக கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து 1931 இல் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவரது கணவரான சேர் ரட்ணசோதி சரவணமுத்து கொழும்பு மாநகர சபையின் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது பெயரிலேயே சரவணமுத்து ஸ்ரேடியம் அமைக்கப்பட்டது.

புகழ்பெற்ற சரவணமுத்துவின் அரசியல் குடும்பத்தில் வந்த வனுஷி, ஐந்து வயதாக இருக்கும் போதே அவரது தந்தை காலஞ்சென்ற ஜனா இராஜநாயகம், தாயார் பவித்திரா ஆகியோருடன் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். வோல்ட்டேர்ஸ் என்பவரைத் திருமணம் செய்த வனுஷிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள்.

தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles