28.5 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பெருந்தோட்ட சமூகத்துக்கு நிரந்த முகவரிகளை வழங்க கோரி உயர்நீதிமன்றில் மனு!

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு கோரி பெருந்தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பெருந்தோட்ட சமூக குடியிருப்பாளர்களுக்கான நிரந்தர முகவரிகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, மனுதாரரான மாவத்தகம, மூவன்கந்த தோட்டத்தை சேர்ந்த ஜீவரத்தினம் சுரேஸ்குமார் என்பவர் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் வாழும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், தமது குடியிருப்புகளுக்கு முகவரிகள் இல்லாத காரணத்தால் இந்த நாட்டின் குடிமக்களாகக் கருதப்படாது பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனுதாரர், தமது மனுவில் பிரதிவாதிகளாக. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட பலரை குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவின்படி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான பதிவு செய்யப்பட்ட நிரந்தர குடியிருப்பு முகவரிகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதன் மூலமே அவர்கள் அரச சேவைகளை அணுகலாம் என்றும் நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் வசிக்கும் மூவன்கந்த தோட்டத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இந்த குடும்பங்கள் எவற்றுக்கும் சொந்த முகவரிகள் இல்லை எனவும் மனுதாரர் குறிப்பிடுகிறார்.

நிரந்தர அஞ்சல் முகவரி இல்லாமையால், அந்த தோட்டத்தில் வசிக்கும் குடிமக்கள் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் மற்றும் அஞ்சல் பொருட்களைப் பெறுவதில்லை.

தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் ‘மூவன்கந்த வத்த, மாவத்தகம’ என்ற முகவரியே தரப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூவன்கந்த துணை அஞ்சல் அலுவலகத்திற்கு மொத்தமாக கடிதங்கள் வந்த பின்னர், அங்குள்ள அதிகாரி, குறித்த கடிதங்களை நம்பத்தகாத முகவர் மூலமாக பெருந்தோட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்குவதையே நடைமுறையாக கொண்டுள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தாம் உட்பட்ட பெருந்தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை பிரதிவாதிகள் மீறியுள்ளனர் என்று அறிவிக்குமாறு மனுதாரர் உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles