28.5 C
Colombo
Friday, April 26, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முரண்பாடுகளை மூடிமறைப்பதால் பயனில்லை?

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு இல்லை.
ஒரு சிலரின் கருத்துக்களை வைத்துக் கொண்டு அவ்வாறான முடிவுக்கு வரக்கூடாதென்று சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் ஊடகமொன்று முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
ஊடகங்கள் கேள்வியெழுப்பும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சம்பந்தன் இவ்வாறான பதில்களைக் கூறுவது வழமையான ஒன்றாகும்.
அண்மைக்காலமாக சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் முடிவுகளுக்கும் இடையில் தொடர்புகள் இல்லை.
சம்பந்தனின் சொந்தக் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இடம்பெறும் விடயங்களில்கூட தலையீடு செய்யக்கூடிய நிலையில் சம்பந்தன் இல்லை.
சம்பந்தனுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையிலும் எவரும் இல்லை.
அண்மையில் திருகோணமலை மாவட்ட தமிழ் அரசுக் கட்சியினர் திருகோணமலை எதிர்நோக்கும் பிரச்னைகள் தொடர்பில் மத்தியகுழுக் கூட்டத்தில் பிரஸ்தாபித்திருந்தனர்.
இதன்போது சம்பந்தனின் உடல்நிலை கருதி கட்சி சில முடிவுகளை எடுக்க வேண்டுமென்னும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தது.
சம்பந்தனுடன் கலந்துரையாடி எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
ஏனெனில், சம்பந்தனின் கட்டுப்பாட்டுக்குள் விடயங்கள் இருந்திருப்பின் இவ் வாறனதொரு விடயத்தை திருகோணமலை மாவட்ட தமிழ் அரசு கட்சியினரால் நினைத்துக் கூடப்பார்த்திருக்க முடியாது.
அண்மைக் காலமாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே சம்பந்தனை சந்திப்பதும் இல்லை.
இந்தநிலையில், கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் இல்லையென்று சம்பந்தனால் எவ்வாறு கூற முடியும்? இன்றுவரையில் கூட்டமைப்புக்கான புதிய பேச்சாளரை நியமிக்க முடியவில்லை.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பேச்சாளர் பதவியை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியிருந்தார்.
ஆனால், அது நிறைவேறவில்லை.
இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பேச்சாளர் இதுவரையில் நியமிக்கப்படவில்லை.
சுமந்திரனே பேச்சாளராக செயல்பட்டு வருகின்றார்.
ஆனால், மறுபுறம் பங்காளிக் கட்சிகள் சுமந்திரன் பேச்சாளர் இல்லையென்று கூறுகின்றனர்.
இதனையும் ஒரு ஜனநாயகக் கட்சிக்குள் இடம்பெறும் சுதந்திரமான கருத்துக்களென்று கூற முடியுமா? ஜனநாயக ரீதியான கட்சிக்குள் முரண்பாடுகள் இடம்பெறுவது சாதாரணமான ஒன்றுதான்.
ஆனால், முரண்பாடுகளை தீர்ப்பதற்கான பொறிமுறையொன்று இல்லாமல் இருப்பதை சாதாரணமானதொரு விடயமாக நோக்க முடியுமா? ஒரு தேர்தல் கூட்டு என்னும் நிலையில் நோக்கினால் கூட்டமைப்புக்குள் பிளவில்லை.
ஏனெனில், பல்வேறு முரண்பாடுகள் இருந்த போதிலும்கூட தேர்தல் காலத்தில் ஓரணியாகவே தேர்தலை எதிர்கொள்கின்றனர்.
ஒரு தேர்தல் கூட்டாகத் தொடர்ந்தும் கூட்டமைப்பால் இயங்க முடிந்திருக்கின்றது.
கூட்டமைப்பு ஒரு தேர்தல் கூட்டாக மட்டுமே இருக்கப் போகின்றதென்றால், உள்முரண்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதில்லை.
ஆனால், தமிழ் மக்களுக்கான ஒரு தேசிய கட்சியாக கூட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் முன்நோக்கி பயணிப்பதற்கான வலுவானதொரு கட்டமைப்பாக கூட்டமைப்பை உருமாற்ற வேண்டும்.
சம்பந்தனால் நிச்சயம் இதனை செய்ய முடியாது.
ஏனெனில், சம்பந்தன் இயங்கக்கூடிய காலத்திலேயே இதனை செய்யவில்லை.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles