33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முல்லைத்தீவு கரும்புள்ளியான் குடிநீர் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி தென்பகுதிக்கு மாற்றம்!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தின் கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி உயரதிகாரிகளால் தென்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதனால் அதனை மீண்டும் தமது பகுதிக்கே பெற்றுத் தருமாறு கோரி 07 பொது அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கியின் உதவியின் கீழ் கரும்புள்ளியான் குடி நீர் திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா நிதி தென்பகுதிக்கு மாற்றப்பட்டமை எமது பிரதேச மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிப்பதற்கு 12.01.2022 ஆம் திகதி பத்திரிகையில் கேள்வி கோரல் விளம்பரம் செய்யப்பட்டு 11.02.2022 வரை விண்ணப்ப முடிவு திகதியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இத் திட்டம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இதற்கான காரணங்களை நாம் தேடிய போது குறித்த ஆயிரம் மில்லியன் ரூபா நிதியானது தென்னிலங்கை பிரதேசத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாக தெரியவந்தது. இது எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும். குடிப்பதற்கு பொருத்தமற்ற நிலத்தடி நீரை கொண்டுள்ள எமது பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களில் அதிகளவானவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் எமது பிரதேசத்திற்கான குடிநீர் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. எமது எதிர்கால சந்ததியினரும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். எனவே தயவு செய்து தாங்கள் இவ்விடயத்தில் அதிக அக்கறை எடுத்து எமது பிரதேசத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட நிதியை எமக்கே மீளவும் பெற்றுத் தர வழி சமைக்க வேண்டும் என 07 பொது அமைப்புக்களும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். குறித்த கடிதத்தின் பிரதிகள் நீர் வழங்கல் அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் உள்ளிட்டவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles