32 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ்ப்பாணத்தில் பழப்புளியை சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டம்

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், 6 ஆயிரம் கிலோ பழப்புளியை, சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி, பழப்புளி சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்படுவது தொடர்பில், யாழ்ப்பாண நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனுக்கு, இரகசிய தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு உடனடியாகச் சென்ற சுகாதாரப் பரிசோதகர் மேற்கொண்ட சோதனையின் போது, 6 ஆயிரம் கிலோ பழப்புளி கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மறுநாள் 26 ஆம் திகதி, யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சந்தேக நபர் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், பழப்புளியும், பொதுச் சுகாதார பரிசோதகரால், நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், புளியை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்ததன் பின்னர், புளியை அழிக்குமாறு, பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தரவிட்டார்.

அதனால், சந்தேக நபர் 36 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை கிடைக்கப் பெற்றது.

அந்த அறிக்கையில், பழப்புளி, வண்டுகள் தாக்கிய நிலையில் காணப்படுவதாகவும், அது மனிதர்கள் உண்பதற்கு ஏற்றதல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சந்தேக நபருக்கு எதிராக, 9 குற்றச்சாட்டுகளுடன், பொது சுகாதார பரிசோதகரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பொதுச் சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றங்களுக்கும், சந்தேக நபர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், 90 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles