25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ்.ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் மீது அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு

பொம்மையாக இருந்து அரசியலுக்கு வந்தவன் அல்ல எனவும், நெருப்பாறு கடந்தே அரசியலுக்குள் நுழைந்ததாகவும், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி செயல்பாடுகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம் எனவும் ஆனால், எவரும் தமது சுயநலன்களுக்காக, திட்டத்தை நடத்த முற்படக்கூடாது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின், சௌபாக்கியா வாரத்தை அங்குரார்ப்பணம் செய்து பயனாளிகளுக்கு உதவித்திட்ட காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
சமுர்த்தித் திட்டத்தை யாழ்ப்பாணத்துக்கு நெருக்கடியான சூழலில் நானே கொண்டுவந்தேன்.

சமுர்த்திச் செயல்பாடுகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம்.
ஆனால், எவரும் தமது சுயநலன்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை நடத்த முற்படக்கூடாது.

யாழ். மாவட்ட மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரின் பெயரால், அவரின் இணைப்பாளர்கள் எனப்படுவோர் மிரட்டல் விடுப்பதாகவும், அழுத்தம் கொடுப்பதாகவும், பல முறைப்பாடுகள் எனது கவனத்துக்கு கொண்டுவரப்படுகின்றன.

அவ்வாறான அநாகரிகமான செயல்பாடுகள், குறித்த ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருக்கு தெரிந்து நடக்கின்றதா? தெரியாமல் நடக்கின்றதா? என்பது தொடர்பில் அவருடன் கலந்துரையாடவுள்ளேன்.

அவருக்குத் தெரியாமல் நடக்குமாக இருந்தால், இவ்வாறான அநாகரிகமான செயலை அவர் கட்டுப்படுத்தவேண்டும்.
மாறாக, அவருக்குத் தெரிந்துதான் அரச அதிகாரிகளுக்கான மிரட்டலும், அழுத்தங்களும் அவரது இணைப்பாளர்களால் விடுக்கப்படுமானால் அதுதொடர்பில் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேசி முடிவு ஒன்றைக் காண்பேன்.

யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல கிளிநொச்சி அதிகாரிகளிடமும் அழுத்தங்கள் பிரயோகித்து இருக்கின்றனர்.
எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை யாழ். அரசாங்க அதிபரிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுமாறு, ஆலோசனை கூறியிருக்கின்றார்கள்.

ஆனால், சிரேஷ்ட அதிகாரியான கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், யாருடைய ஆலோசனையையும் கேட்கும் அவசியம் தனக்கு இல்லை என்று தகுந்த பதிலளித்துள்ளார்.

யாழ்., கிளிநொச்சி மக்களால் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டு சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், சிரேஷ்ட அமைச்சராகவும் இருக்கின்ற என்னை, இந்த மக்களிடமிருந்து சண்டித்தனத்தால் பிரித்துவிடமுடியாது.

நான் தூரத்தே இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு, அதாவது ஒரு பொம்மையாக இருந்து விட்டு அரசியலுக்குள் வரவில்லை.
பல நெருப்பாறுகளைக் கடந்தே தமிழ் மக்களின் அரசியலுக்குள் வந்தவன்.

அரசியல் தலைமைகளின் தவறான தீர்மானங்களால், சொல்லொணாத் துன்பங்களையும் கணக்கெடுக்க முடியாத இழப்புக்களையும், மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது கிடைத்திருக்கின்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி, மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப நான் முயற்சிக்கின்றேன்.
யதார்த்தத்தை புரிந்துகொண்டு மக்கள் சரியான தெரிவுகளை மேற்கொண்டு பயனடைய வேண்டும்-எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி ஆகிய பிரதேச செயலகங்களிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் நேற்று சௌபாக்கிய வாரம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles