27 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரணிலை நம்பலாமா?

ரணில் விக்கிரமசிங்க தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வை காணவுள்ளதாகக் கூறுகின்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் சூழலில் ஒரு கேள்வியை பரவலாக காணமுடிகின்றது – ரணில் விக்கிரமசிங்கவை எவ்வாறு நம்புவது? இந்தக் கேள்வி அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்ல, அரசியல் அவதானிகள் என்போரிடமும் உண்டு.
பொதுவாக ரணிலை ஒரு நரியென்று கூறும் பார்வையொன்று தமிழ் சூழலில் நீண்டகாலமாக உண்டு.
அன்ரன் பாலசிங்கம்கூட இதற்கு விதிவிலக்கல்லர்.
ரணிலின் கெட்டித்தனம் தொடர்பான அச்சத்திலிருந்தே இவ்வாறான பார்வை எழுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் ரணிலை எவ்வாறு நம்புவதென்னும் கேள்வி எழுகின்றது?
தற்போதுள்ள தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிகரான அனுபவமுள்ளவர்கள் வேறு எவருமில்லை.
ரணிலைப் பொறுத்தவரையில் தமிழரின் அரசியல் பிரச்னைகள் தொடர்பில் புதிதாகத் தெரிந்துகொள்வதற்கு எதுவுமில்லை.
ஏனெனில், அவர் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திலிருந்து ஒஸ்லோ பேச்சு வரையில் அனுபமுள்ளவர்.
இலங்கைத் தீவின் இனப்பிரச்னையை தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இரண்டு வரலாற்று நிகழ்வுகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில்தான் இடம்பெற்றன.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களின் போதும், தென்னிலங்கை சிங்கள கடும்போக்குவாத தரப்புக்கள் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தாலும்கூட, உலகத்தின் பார்வையில் தமிழர்களே அதிகமாகக் குற்றவாளிகளாக நோக்கப்பட்டனர்.
இந்திய தலையீட்டின் போது, விடுதலைப் புலிகள் இயக்கம் இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு வருடங்கள் மோதலில் ஈடுபட்டது.
இந்திய படைகளை வெளியேற்றுவதற்காக பிரேமதாஸவுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டது.
இதன் விளைவாக, சிங்களவர்களை விடவும் தமிழர்கள் மீதே இந்தியாவின் கோபம் திரும்பியது.
பிரேமதாஸவின் கபட தந்திரங்களைவிடவும் புதுடில்லி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதே கோபப்பட்டது.
காரணம் விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்துடன் நேரடியாக மோதினர்.
ஆனால், பிரேமதாஸவோ ஒரு துரும்பைக்கூட இந்தியாவுக்கு எதிராக நேரடியாகப் பிரயோகிக்கவில்லை.
ஒஸ்லோ பேச்சின்போதும் சிங்கள ஆட்சியாளர்கள் பல தந்திரங்களைப் பிரயோகித்தனர்.
அமெரிக்காவில் இடம்பெற்ற உதவி வழங்கும் மகாநாட்டின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதனால், விடுதலைப் புலிகள் இயக்கம் அதிருப்தியடைந்தது.
இந்த மகாநாடு அமெரிக்காவில் இடம்பெற்றால் இவ்வாறானதொரு நிலைமையேற்படும் என்பதைத் தெரிந்து கொண்டே கொழும்பு செயல்பட்டது.
இதனைத் தவிர்த்திருக்கலாம்.
ஆனால், 2005 ஜனாதிபதி தேர்தலில் புலிகளின் தேர்தல் பகிஷ்கரிப்பால் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார்.
இதனைத்தொடர்ந்து, ஒட்டுமொத்த மேற்குலகின் கோபமும் விடுதலைப் புலிகள் மீதே திரும்பியது.
சிங்கள ஆட்சியாளர்களின் தவறுகளை அனைவரும் மறந்துவிட்டனர்.
இறுதியில் ஒட்டுமொத்த மேற்குலகமுமே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திரும்பியது.
இந்த இரண்டு அனுபவங்களிலிருந்தும் நாம் எதை கற்றுக்கொள்ளப்போகின்றோம்? சிங்களவர்களை நம்பலாமா? வரலாற்று அனுபவங்களின்படி, நம்பமுடியுமா என்னும் கேள்வி நியாயமானதுதான், ஆனாலும் சிங்களவர்களுடன் பேச வேண்டுமென்பதே அரசியல் யதார்த்தமாகும்.
இந்தப் பின்புலத்தில் பேச்சுக்கு அழைப்பவர் எவ்வாறானவர் – அவரை நம்பலாமா என்னும் கேள்விகளுக்கு அப்பால், சூழ்நிலையை தந்திரோபாயமாக அணுகுவதும் அதனடிப்படையில் செயல்படுவதுமே இப்போதைய தேவையாகும்.
ரணில் தந்திரங்களை செய்தால், அதற்குள் அகப்படாமல் எவ்வாறு தமிழர் நலன்களிலிருந்து விடயங்களைக் கையாளுவதென்று சிந்திப்பதுதானே சரியானது.
இதுவரையான அரசியல் அனுபவங்களின்படி சிங்களவர்கள் ஏமாற்றினார்கள் என்பதைவிடவும் தமிழர் தரப்புக்கள் ஏமாந்தன என்பதுதானே உண்மையானது.
மற்றவர்கள் ஏமாற்றுகின்றார்கள் என்றால், நாங்கள் தொடர்ந்தும் ஏமாந்து கொண்டிருக்கின்றோம்.
சிங்களவர்களின் தந்திரங்களை முறியடிக்கும் வல்லமை எங்கள் பக்கத்தில் இருக்கவில்லை என்பதுதானே உண்மை.
ஆளும் தரப்புகள் எப்போதும் அப்படித்தான் செயல்படும்.
அவர்கள் எப்போதுமே எதிர்தரப்புக்களை வீழ்த்தும் தந்திரங்களில்தான் கவனம் செலுத்துவர்.
அது ஆளும் தரப்புகளின் பண்பு.
பொறிக்குள் அகப்படவும்கூடாது, அதேவேளை எங்களுடைய நலன்களையும் பாதுகாக்க வேண்டும்.
இதற்குத்தான், ஒரு மக்கள் கூட்டத்துக்கு தலைமை ஒன்று தேவைப்படுகின்றது.
எனவே, ரணில் பற்றிய கதைகளை விடுத்து, அவருடன் பேசி அவரின் பொறிக்குள் அகப்படாமல் நலன்களை வெற்றிகொள்வது பற்றியே தமிழ்த் தேசியக் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles