33 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வெளியாருக்கான சிங்கள எதிர்ப்பு?

குணாதாச அமரசேகர தலைமையிலான தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு என்னும் அமைப்பு அமெரிக்கத் தூதுவர் இலங்கையின் விவகாரங்களில் தலையீடு செய்யக்கூடாதென்று வலியுறுத்தியிருக்கின்றார்.
அதாவது, சீனாவுக்கு எதிரான கருத்துகளை அமெரிக்க தூதுவர் பரப்பிக் கொண்டிருப்பதாகவும், அதனை நிறுத்த வேண்டும் என்றும் குறித்த அமைப்பு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
சிங்கள தேசியவாதிகள் (அப்படி தங்களை காண்பித்துக் கொள்பவர்கள்) பொதுவாக மேற்குலக மற்றும் இந்திய எதிர்ப்புக் கோஷங்களை முன்வைப்பது உண்டு.
சில தென்னிலங்கை கட்சிகள் இதனை ஓர் அரசியல் முதலீடாகவும் பயன்படுத்தி வருகின்றன.
இவ்வாறான குழுக்கள் அனைவருமே இதுவரையில் ராஜபக்ஷக்களோடுதான் அணி சேர்ந்திருந்தனர்.
ஆனால், இதிலுள்ள வேடிக்கையான விடயம் என்னவென்றால் ராஜபக்ஷ சகோதரர்களில் மூவர் அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பவர்கள்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது அதற்கு தலைமை தாங்கிய கோட்டாபய ராஜபக்ஷ ஓர் அமெரிக்கர்.
2020 வரையில் அவர் ஓர் அமெரிக்கராகவே இருந்தார்.
ஒருவேளை 19ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் இரட்டை குடியுரிமை விவகாரம் தடுக்கப்படாவிட்டால் கோட்டாபய ராஜபக்ஷ அவரின் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டிருக்க மாட்டார்.
மொட்டு கட்சியை கட்டியெழுப்பிய பஸில் ராஜபக்ஷ ஓர் அமெரிக்கர்.
அமெரிக்க குடியுரிமையை கொண்டிருப்பவர்களின் தலைமையின் கீழிருந்து கொண்டே அமெரிக்க எதிர்ப்பை வெளியிடும் அதியசமான அரசியல்வாதிகள் தென்னிலங்கையில்தான் இருக்கின்றனர்.
சிங்களவர்கள் மத்தியில் காணப்படும் அறியாமைகளை தங்களின் சுகபோகங்களுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
வெளியாரின் உதவிகளின்றி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் ஒருபோதுமே வெற்றிபெற்றிருக்க முடியாது.
குறிப்பாக, மேற்குலக நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தது. அமெரிக்கா 1997இல் தடைசெய்தது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா 2006இல் தடை செய்தது.
மேற்குல தடைகள் விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தின.
விடுதலைப் புலிகள் அமைப்பு மேற்குலகால் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில்தான் இலங்கை இராணுவத்தினரால் வெற்றிபெற முடிந்தது.
இந்தியாவின் பங்கு பெரியளவில் இருக்கவில்லை.
ஏனெனில், இந்தியா 1991களிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்துவிட்டது.
இந்தியாவின் தடைக்குப் பின்னர்தான் விடுதலைப் புலிகள் மேற்குலகத்தை நோக்கி நகர்ந்தனர்.
மேற்குலக ஜனநயாக சூழலைப் பயன்படுத்தியே புலிகள் அமைப்பு பெருமளவில் வளர்சியடைந்தது.
ஆனால், ஒரு கட்டத்தில் மேற்குலகம் விடுதலைப் புலிகளை சுற்றிவளைத்து தனிமைப்படுத்தியது.
ஏற்கனவே, இந்தியாவின் ஆதரவை இழந்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு மேற்குலகத்தின் ஆதரவையும் முற்றிலுமாக இழந்தது.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால் ராஜபக்ஷக்களின் வெற்றியின் பின்னால் மேற்குலகின் ஆதரவிருந்தது.
ஆனால், சிங்கள தேசியவாதிகளாக தங்களை காட்சிப்படுத்திக் கொள்பவர்களோ அவப்போது அமெரிக்காவுக்கு எதிராகவும் மேற்குலகுக்கு எதிராகவும் கோஷ
ங்களை எழுப்புவது வேடிக்கையானது.
இன்னும் வேடிக்கையானது பதவியிழந்த கோட்டாபய ராஜபக்ஷவோ அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காகக் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்.
இது தான் ராஜபக்ஷக்களின் சிங்கள தேசியவாதம்.
ஆனால், இந்த போலிவாதத்திலிருந்து சிங்களவர்களை விடுவிப்பதற்கு தென்னிலங்கையில் சரியான அரசியல்வாதிகள் இல்லை.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles