முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து 11 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அவர் தொடர்பான எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வெலிகம – பெலன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 27 ஆம் திகதி உத்தரவிட்டது.
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை தவிர்த்து தலைமறைவாகியிருந்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் தடை செய்ய முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.