13ஐ வலியுறுத்திய மோடி

0
29

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவிற்கு புதுடில்லியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான ஊடக சந்திப்பின் போது, பிரதமர் மோடி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இணைப்புத் திட்டங்கள் தொடர்பில் அதிக கரிசனையை வெளிப்படுத்தியிருந்தார்.

இரு நாடுகளுக்குமான இணைப்புத் திட்டங்கள் சமரசங்களுக்கு அப்பாற்றப்பட்டது என்பதையே மோடியின் கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன. அநுரகுமாரவின் உரையில் அனைத்தையும் அவர் வரவேற்றிருக்கின்றார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் தங்களின் வெற்றி புதியது என்பதைக் சுட்டிக் காட்டியிருக்கும் ஜனாதிபதி அநுர, இந்தியாவுடன் இணைந்து பயணிக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

மோடி, தனதுரையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் முழுமையான அமுலாக்கம், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது ஆகிய விடயங்கள் தொடர்பில் அநுரகுமார திஸநாயக்கவுடன் கலந்துரையாடினார் எனவும் அநுரகுமார தலைமையிலான இலங்கை அரசாங்கம் இந்த விடயங்களை முன்னெடுக்குமென்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மாகாண சபை முறைமை பயனற்றது – அதனால், நாட்டுக்கு எந்தவொரு நன்மையும் இல்லையென்று கூறியிருந்த நிலையில், இந்தியப் பிரமதமர் மோடி, அநுரகுமாரவுடனான சந்திப்பின் போது, 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் மாகாண சபையை வலியுறுத்தியிருப்பதானது, புதுடில்லி தெளிவான செய்தியொன்றை வழங்கியிருக்கின்றது.

மாகாண சபை முறைமையும், 13இன் உள்ளடக்கமும் இலங்கைக்கு பொருத்தமற்றது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனின் அநுர குமார திசாநாயக்க இதனை தனது உரையில் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் அது பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. இலங்கையின் மாகாண சபை முறைமை தொடர்பில் இந்தியா பேசுவது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்பதை அநுர நன்கறிவார். இந்தியா தனக்குள்ள உரிமையின் அடிப்படையிலேயே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசுகின்றது.

அநுரவின் புதுடில்லி விஜயத்திற்கு முன்பே ‘ஈழநாடு’ இந்த விடயங்களை தெளிவாக சுட்டிக் காட்டியிருந்தது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் கருத்துரைப்பதாயின், அதனை விடவும் ஒரு சிறந்த அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் அநுரகுமார திஸநாயக்க இந்தியாவிற்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், அதில்தான் பிரச்னையும் உண்டு. ஏனெனில் அவ்வாறானதொரு தீர்வாலோசனையை முன்வைக்கக் கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை. இருப்பதையும் பலவீனப்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கை தான் தென்பகுதியிலிருந்து மேலேழும். இந்த இடம்தான் பிரச்னைக்குரிய இடம்.

ஏனெனில் ‘ஈழநாடு’ ஏற்கனவே சுட்டிக்காட்டியது போன்று, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி, புதிய அரசியலமைப்பில் 13இற்கு பதிலான விடயம் தொடர்பில் இந்தியாவின் ஆலோசனையை பெற வேண்டிய கடப்பாடுண்டு. இந்திய – இலங்கை ஒப்பந்தம் அதற்கான உரித்தை வழங்கியிருக்கின்றது. இந்த விடயத்தைத்தான் சமஷ்டிக்கு அழுத்தம் கொடுங்கள் என்று புதுடில்லிக்கு கடிதம் எழுதுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். புதுடில்லியிடம் சமஷ்டிக் கோரிக்கையை வலியுறுத்தும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்போர் ஒன்றில் அரசியலை புரிந்துகொள்ளும் திறனற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது, தமிழ் மக்களுக்கு எந்தவொரு நல்ல விடயமும் நடத்துவிடக் கூடாது என்பதில் ஒற்றைக் காலில் நிற்பவர்களாக இருக்க வேண்டும்.

இதில் அரசியல் கட்சிகள் மட்டு மல்ல தங்களை சிவில் சமூகமாக, கருத்துருவாக்கிகளாக முன்னிலைப்படுத்துபவர்களும் அடங்குவார்கள். பிரபாகரனுக்கு பின்னரான, கடந்த பதினைந்து வருடங்களில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு சிறிய முன்னேற்றத்தைக் கூட தமிழ் கட்சிகள் என்பவற்றால் காண்பிக்க முடியவில்லை.