அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம், தன்னால் தயாரிக்கப்படவில்லை என, நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போது கொண்டுவரப்படவுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம், பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என, நீதி அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை வெளியிட்டார்.
கொழும்பில், நேற்று முன்தினம் (14) மாலை நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர், இவ்வாறு தகவல் வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:
‘பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால், 9 பேர் கொண்ட குழு ஒன்று 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
நான் நினைக்கின்ற வகையில், திங்கட்கிழமை இந்தக் குழு கூடும்;.
குழுவின் அறிக்கை சமர்பிக்கப்படுவதற்கான இறுதித் திகதி குறிப்பிடப்படவில்லை.
மக்களின் கோரிக்கைகள், யோசனைகளுக்கு செவிகொடுத்து, அதனை செய்வதற்கு நாங்கள் பின்வாங்க மாட்டோம்.
20 ஆவது திருத்தச் சட்டத்தை நான் தயாரிக்கவில்லை.
19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு, அதற்கு முன்னர் இருந்த திருத்தத்தைப் போல அமுல்படுத்துவதே அதில் இடம்பெறும்.
அமைச்சரவையின் ஆலோசனைப் பேரில், சட்டவாக்கப் பிரிவினால், பிரேரணையாக 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின்படி, அமைச்சரவைதான் சட்டவாக்கம் செய்வதற்கான அதிகாரம் கொண்டிருக்கிறது.
திருத்தச் சட்டமூலம் இறுதிப்படுத்தப்படுவதற்கான பிரிவு, எனக்கு கீழ் உள்ள நீதியமைச்சில் இருப்பதால்தான், நான் தொடர்புபட்டுள்ளேன்.
எனது புதிய விடயங்கள், இந்த 20 ஆவது திருத்தத்தில் இல்லை.
இது 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சமமானதாகும்.
இந்த திருத்தச் சட்டமூலத்தை அங்கிகரிப்பதற்கான பெரும்பான்மை பலம், எமக்கு இருக்கிறது.
தற்போதும்கூட எமக்கு 150 உறுப்பினர்கள் உள்ளனர்.
இன்னும் 15 உறுப்பினர்கள் வெளியே இருந்து, அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும், எமது கட்சியில் இணையவும் விருப்பம் வெளியிட்டிருக்கின்றனர்”
என குறிப்பிட்டுள்ளார்.