20 ஆவது திருத்த சட்டவரைபில் இருக்கும் குறைபாடுகளை தீர்த்துக்கொண்டு புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டவரைபு வர்த்தமானி படுத்தப்பட்டு வெளிவந்துள்ள நிலையில் அதில் மேலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கள் பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகளில் இருந்து மாத்திரமல்லாது ஆளுங்கட்சி உறுப்பினர்களில் இருந்தும் அது தொடர்பான திருத்த யோசனைகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
இது தொடர்பில் ஆளுங்கட்சி கூட்டத்தொடரிலும் கலந்துரையாடப்பட்டது.
அதனால் அரசியலமைப்பு 20ஆவது திருத்த சட்ட வரைபில் இருக்கும் குறைபாடுகளை தீர்த்துக்கொண்டு பிரேரணைகளுடன் புதிய வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிடுவதாக ஜனாதிபதி எமக்கு வாக்குறுதி அளித்திருக்கின்றார்.
அத்துடன் இது தொடர்பாக ஆராய குழுவொன்று அமைக்கப்படவேண்டும் எனவும் ஆளுங்கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கமைய, பிரதமரினால் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, குழுவின் அறிக்கையை அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.