உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சா்வதேச அளவில் 338,779 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
ஐரோப்பிய நாடுகளில் தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவது சா்வதே அளவில் அந்த எண்ணிக்கையை அதிகபட்சமாக்கியுள்ளது.
உலக நாடுகளிலேயே இந்தியா, அமெரிக்கா, பிரேஸில் ஆகிய நாடுகளில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான தினசரி கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னா், இந்த மாதம் 2 ஆம் திகதி தான் உலக அளவில் அதிகபட்ச தினசரி கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டது. அந்த நாளில் மட்டும் 330,340 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 3.6 கோடிக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சா்வதேச கரோனா நிலவரத்தைக் கண்காணித்து வரும் ‘வோ்ல்டோமீட்டா்’ இணையதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 10.6 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
அதிகபட்சமாக ஆசியாவில் 1.15 இலட்சத்துக்கு மேற்பட்டவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் இதுவரை 2.08 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.
ஆசியாவுக்கு அடுத்தபடியாக, அமெரிக்கா இடம் பெற்றுள்ள வட அமெரிக்க பிராந்தியத்தில் அதிகம் போ் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்தப் பகுதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா பலி எண்ணிக்கையும் அந்தப் பிராந்தியத்தில் 3.2 இலட்சத்தைக் கடந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.