புத்தாண்டுக்காக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு மற்றும் பிற நகரங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக, நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைக்கான விசேட போக்குவரத்து திட்டத்தைச் செயல்படுத்தத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்காக சுமார் 800 மேலதிக பேருந்துகளை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அத்துடன், புத்தாண்டு காலத்தில் பிரயாணங்களை மேற்கொள்ளும் பயணிகளின் வசதி கருதி இன்றைய தினமும் விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி,இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 300 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபையின் பிரதம செயற்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.அத்துடன், மேலதிகமாக 20 தொடருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.