அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆயுர்வேத மருந்து பொதிகள் வழங்கும் நிகழ்வும் விழிப்புணர்வும் நடைபெற்றுள்ளது.
கொவிட்-19 வைரசுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் ‘இம்முனிட்டி பூஸ்டர்’ எனும் ஆயுர்வேத மருந்து பொதிகள் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினரால் பல்வேறு அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், முப்படையினர் மற்றும் வங்கி கூட்டு ஸ்தாபன ஊழியர்கள் என சகல தரப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பரின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வேண்டுகோளுக்கமைய பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆயுர்வேத மருந்து பொதிகளை இன்று வழங்கி வைத்தார்.
அத்தோடு ‘இம்முநிட்டி பூஸ்டர்’ எனும் ஆயுர்வேத மருந்து பொதிகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும் ஆயுர்வேத மருந்து பொதியினையும் பிரதேச செயலாளரிடம் கையளித்ததுடன் விழிப்புணர்வு கருத்துக்களையும் உத்தியோகத்தர் மத்தியில் முன்வைத்தார்.
இதேநேரம் பிரதேச செயலாளரும் ஆயுர்வேத மருந்துகளின் பயன்பாடு தொடர்பிலும் மேலத்தேய நாடுகளில் இதற்காக வழங்கப்படும் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.
சுகாதார சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் அனுசரணையுடன் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை இணைந்து, நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கக் கூடிய ஆயுர்வேத மருந்து வகைகளை அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பிரபல்லியப்படுத்தி வருகின்றது.
இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.