அண்மைய காலங்களில் நாட்டில் இடம்பெற்ற அனைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புடைய பெரும்பாலானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
காவல்துறை ஊடக பிரிவில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையில் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 11 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடையவை எனவும், ஏனையவை காணி தகராறு உள்ளிட்ட தனிப்பட்ட முரண்பாடுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்காக உதவி புரிந்தமை தொடர்பில் மொத்தமாக 49 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த காலப்பகுதியினுள் ரீ 56 ரக துப்பாக்கிகள் ஐந்தும், 6 பிஸ்டல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக இயலுமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த பெண் தொடர்பான நம்பகமான தகவல்களை வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் எனவும் தகவல் வழங்குபவர்கள் தொடர்பில் இரகசியம் பேணப்படும் எனவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேக நபர் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.