நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.